2023-2024 பெரும்போகத்தில் 71 சதவீத பயிர்ச்செய்கை நிலங்கள் சேதம்
கடந்த 2023 - 2024ஆம் ஆண்டு வரையிலான பெரும்போக காலப்பகுதியில் பெய்த கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக நெல் பயிர்செய்கையை தவிர மொத்த பயிர்ச்செய்கை நிலத்தில் 71 சதவீதம் சேதமடைந்துள்ளதாக விவசாயத் திணைக்களம் (Department of Agriculture Sri lanka) தெரிவித்துள்ளது.
அதன்படி, கடந்த 2023 ஆம் ஆண்டு தொடக்கம் 2024 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் அதிக மழை மற்றும் வெள்ளம் காரணமாக நாட்டில் காய்கறிகள் மற்றும் பிற பயிர்களுடன் பயிரிடப்பட்ட மொத்தம் 68,131 ஹெக்டேர் நிலங்கள் அழிவடைந்துள்ளன.
காய்கறி மற்றும் பழப் பயிர்ச்செய்கை
மேலும், இதே காலப்பகுதியில் பெரும்போகத்தில் பயிரிடப்பட்ட 100,000 ஹெக்டேர் நெற்பயிர்களும் கடும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக சேதமடைந்துள்ளன.
இது தவிர 23,874 ஹெக்டேர் நிலத்தில் காய்கறிகள் மற்றும் இதர பயிர்கள் பயிரிடப்பட்டு பூச்சிகள் மற்றும் பிற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளன.
இருப்பினும், ஏப்ரல் மாதத்தில் காய்கறி மற்றும் பழப் பயிர்ச்செய்கை மீண்டும் ஒருமுறை மேம்பட்டுள்ளதுடன் தற்போது அறுவடையும் அதிகரித்துள்ளது.
அத்துடன் சாதகமான காலநிலை காரணமாக, குறிப்பாக பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில், மரக்கறி மற்றும் பிற பயிர் செய்கை மிகவும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாகவும் இதனால் காய்கறிகளின் விலைகள் கணிசமாகக் குறைந்துள்ளதாகவும் விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |