70 வயது மாமனார் தடியால் தாக்கிப் படுகொலை - இளம் வயது மருமகன் தலைமறைவு
கம்பஹா - நிட்டம்புவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தங்கொல்லவத்தை பகுதியில், 70 வயதுடைய வயோதிபர் ஒருவர் தடியால் தாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று(10.10.2026) இடம்பெற்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
70 வயது முதியவர் படுகொலை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
பாதிக்கப்பட்ட வயோதிபருக்கும் அவரது மகளின் கணவரான மருமகனுக்கும் இடையே நேற்று(10) சனிக்கிழமை மாலையில் ஏற்பட்ட குடும்பத் தகராறு முற்றிய நிலையிலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தாக்குதலில் பலத்த காயமடைந்த வயோதிபர், உடனடியாக வத்துபிட்டிவல ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் நிட்டம்புவை - தங்கொல்லவத்தை பகுதியைச் சேர்ந்தவராவார்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தலைமறைவாகியுள்ள 26 வயதுடைய சந்தேகநபரை (மருமகன்) கைது செய்வதற்காக நிட்டம்புவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.