யாழில் 6000 அடி உயரத்தில் இருந்து குதித்து சாகசம்
யாழில் இடம்பெற்றுவரும் “வான் சாகசம் – 2024” கண்காட்சி நிகழ்வில் வடக்கு வான்பரப்பில் முதன்முதலாக 6000 அடி உயரத்தில் இருந்து குதித்து பரசூட் வீரர்கள் சாகசம் புரிந்துள்ளனர்.
இலங்கை விமானப்படையின் 73ஆவது வருட நிறைவை முன்னிட்டு “வான் சாகசம் – 2024” கண்காட்சி நிகழ்வுகள் யாழ்ப்பாணம் – முற்றவெளி மைதானத்தில் தொடர்ந்து இன்று நான்காவது நாளாகவும் இடம்பெற்றுவருகிறது.
“நட்பின் சிறகுகள்” எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் கடந்த 06ஆம் திகதி ஆரம்பமாகிய கண்காட்சி எதிர்வரும் 10ஆம் திகதிவரை காலை 10 மணி முதல் இரவு 11 மணிரை இடம்பெறவுள்ளது.
பரசூட் வீரர்களின் சாகசம்
இந்நிலையில் பரசூட் வீரர்களின் சாகசம் இன்றையதினம் இடம்பெற்றுள்ளது. அதாவது, வடக்கு வான்பரப்பில் முதன்முதலாக 6000 அடி உயரத்தில் இருந்து குதித்து 8 பரசூட் வீரர்கள் சாகசம் புரிந்துள்ளனர்.
குறித்த வீரர்கள் பலாலி விமானப்படை தளத்தில் இருந்து உலங்கு வானூர்தி மூலம் புறப்பட்டு சென்று, 6000 அடி உயரத்தில் இருந்து முற்றவெளி மைதானத்தில் குதித்து சாகசம் புரிந்துள்ளதுடன் மக்கள் மிகவும் ஆரவாரத்துடன் அவர்களை வரவேற்றுள்ளனர்.
இதன்போது குழுவின் தலைவர் ஜகத் கொடகந்த, அம்பாறை விமானப்படை பயிற்சி பாடசாலையின் கட்டளை அதிகாரி விங் கொமான்டர் விஜிததுங்க, சார்ஜன்ட் சேனாதீர, சார்ஜன் பண்டார, சார்ஜன்ட் விஜயக்கோன், சார்ஜன்ட் பண்டார, கோப்ரல் விக்ரமரத்ன, சிரேஸ்ட வான்படை வீரங்கனை மதுபாசினி ஆகிய வீரர்கள் இந்த சாகசத்தை புரிந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






