மட்டக்களப்பில் சிங்களவர்களால் கடத்தப்பட்ட 6 தமிழர்களும் வைத்தியசாலையில்
மட்டக்களப்பில் காணாமல் போனதாக கூறப்பட்ட பண்ணையாளர்கள் ஆறுபேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு - மயிலத்தமடு மற்றும் மாதவணை மேய்ச்சல் தரைப்பகுதியில் நேற்றைய தினம் அம்பாறை சிங்பகள விவசாயிகளால் தாக்குதலுக்குள்ளான நிலையில் காணாமல்போனதாக தெரிவிக்கப்படும் ஆறு பண்ணையாளர்கள் மகா ஓயா பொலிஸாரினால் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதை தொடர்ந்து பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை தினம் தெஹியத்த கண்டிய நீதிவான் நீதிமன்றத்திற்கு ஆஜர்படுத்திய பின்னர் 6 பண்ணையாளர்களும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த ஆறு பண்ணையாளர்களுக்கும் எதிர்வரும் பங்குனி மாதம் 10ஆம் திகதி குறித்த வழக்கு இடம் பெறவுள்ளது.
இதேநேரம் தாக்குதலுக்குள்ளாகியிருந்த பண்ணையாளர்கள் மட்டக்களப்பு மாவடிவேம்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மயிலத்தமடுவில் தமது கால்நடைகளை தேடிச்சென்றவர்களை அங்கு சட்ட விரோதமாக பயிர்ச்செய்கையில் ஈடுபடுவோர் பிடித்து கடுமையாக தாக்கிய பின்னர் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பண்ணையாளர்களை வைத்தியசாலைக்கு சென்று சிறிநேசன் பார்வையிட்டதுடன் அவர்கள் எதிர்கொண்ட பிரச்சினைகள் குறித்தும் கேட்டறிந்துகொண்டுள்ளார்.
மயிலத்தைமடு மாதவனை மேய்ச்சல் தரையில் தாக்கப்பட்ட பண்ணையாளர்களை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்களை தமிழ் தேசிய மக்கள் முன்னணி பிரதிநிதிகளும் சென்று பார்வையிட்டுள்ளனர்.
இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் மேய்ச்சல் தரையான மயிலத்தமடுவில் மாடு மேய்க்க சென்ற பண்ணையாளர்கள் ஆறுபேர் கடத்தப்பட்டு துன்புறுத்தப்பட்டதை கண்டித்தும் அவர்களை விடுதலைசெய்யக்கோரியும் இவ்வாறான கடத்தல் சம்பவங்கள் இடம்பெறக்கூடாது என்பதை வலியுறுத்தியும் நேற்று சிந்தாண்டி சந்தியில் பண்ணையாளர்கள், சிவில் அமைப்பு பிரதிநிதிகள், தமிழ்த் தேசிய அரசியல் பிரமுகர்கள் இணைந்து கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.
இந்தபோராட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன்,சீ.யோகேஸ்வரன். சிறிநேசன் , கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் இ.பிரசன்னா, தமிழரசுக்கட்சி வாலிபர் முன்னணி தலைவர் கி.சேயோன், தமிழ்தேசியமக்கள்முன்னணி தேசிய அமைப்பாளர் த.சுரேஷ், பிரதேசசபை உறுப்பினர்களான குணசீலன், தேவன், மாமனிதர் ஜோசப் பரராசசிங்கம் அமைப்பின் தலைவர் கலைவாணி, மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் வே. தவராசா மற்றும் சிவில் அமைப்பு பிரதிநிதிகள் மதகுருமார் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.







