சமூக விரோதச் செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க பொலிஸார் 6 தீர்மானங்கள்
சம்மாந்துறை ஹிலால் ஜும்ஆ பள்ளிவாசலை அண்மித்த குடியிருப்புப் பகுதியில் நீண்டகாலமாக நிலவி வரும் போதைப்பொருள் பாவனை, சமூக விரோதச் செயற்பாடுகள் மற்றும் சுகாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில், அம்பாறை – மட்டக்களப்பு பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்லவின் பங்கேற்புடன் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் ஆறு முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
வீரமுனை 04 சிவில் பாதுகாப்புக் குழுவின் தலைவரும், சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை உறுப்பினருமான எம்.எம். முஹம்மட் அலி தலைமையில் நேற்று(27.11.2026) ஹிலால் ஜும்ஆ பள்ளிவாசலில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில், பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு பொதுமக்களின் முறைப்பாடுகளைக் கேட்டறிந்துள்ளார்.
குறித்த பகுதியில் சுமார் ஐந்து ஆண்டுகளாக இரவு வேளைகளில் போதைப்பொருள் பாவனை மற்றும் தவறான நடத்தை உள்ளிட்ட சமூக விரோதச் செயற்பாடுகள் இடம்பெறுவதாகவும், பராமரிப்பின்றிக் கைவிடப்பட்ட காணிகள் பற்றைக்காடுகளாக மாறியுள்ளதால் சுகாதார மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளதாகவும் பொதுமக்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பொலிஸார் வழங்கிய உறுதி
இந்த பிரச்சினைகள் தொடர்பில் பல்வேறு அரச மற்றும் உள்ளூராட்சி அதிகாரிகளிடம் ஏற்கனவே முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில், அவற்றின் பிரதிகள் அம்பாறை மாவட்டப் பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. இதனையடுத்து, கடந்த 22ஆம் திகதி சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என். நிசாந்த பிரதீப் குமார குறித்த பகுதிக்கு நேரில் விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்திருந்தனர்.

இதன்போது, வெளிநாடுகள் மற்றும் வெளியூர்களில் வசிப்போருக்குச் சொந்தமான கைவிடப்பட்ட வீடுகள், காணிகளைப் பராமரிப்பதற்கு குடும்பப் பிரதிநிதிகளை நியமித்தல், வாடகை வீடுகளில் தங்கியுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட வெளியிடங்களைச் சேர்ந்தவர்களின் விபரங்களைப் பொலிஸார் முறையாகப் பதிவு செய்தல் ஆகிய நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டது.
மேலும், வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு நாட்கள் பகல் மற்றும் இரவு வேளைகளில் பொலிஸாரும் சிவில் பாதுகாப்புக் குழுவினரும் இணைந்து ரோந்துப் பணிகளில் ஈடுபடுதல், பற்றைக்காடுகளையும் பராமரிப்பற்ற காணிகளையும் துப்புரவு செய்தல், கட்டாக்காலி மாடுகளைக் கட்டுப்படுத்துதல் மற்றும் வீதிகளில் வேகத்தடை அமைத்தல் உள்ளிட்ட தீர்மானங்களும் எடுக்கப்பட்டன.
இந்த கலந்துரையாடலில் அக்கரைப்பற்று பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நந்தநாராயண, கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசார், சம்மாந்துறை பிரதேச செயலாளர் தேசபந்து எஸ்.எல். முஹம்மது ஹனீபா, பிரதேச சபைத் தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர், அம்பாறை மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.டி.சி.எஸ். ரத்நாயக்க,அம்பாறை மாவட்ட பெண்கள் மற்றும் சிறுவர் பாதுகாப்புப் பிரிவின் பிரதான பொலிஸ் பரிசோதகர் தயானி கமகே, சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என். நிசாந்த பிரதீப் குமார ஆகியோர் கலந்துகொண்டனர்.


