போதைப்பொருள் கடத்தலில் பெண் உட்பட நால்வர் கைது
இலங்கைக்கு கடத்துவதற்காக தமிழ்நாட்டின் வேதாளை கடற்தொழிலாளர் கிராமத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றபட்டதுடன் அதனை இலங்கைக்கு கடத்த முயன்ற பெண் உட்பட நான்கு பேர் தமிழ்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் அடுத்துள்ள தனுஷ்கோடி கடல் பகுதி இலங்கைக்கு மிக அருகே இருப்பதால் மண்டபம் அடுத்த வேதாளை, சீனியப்பா தர்கா மற்றும் மரைக்காயர் பட்டினம் உள்ளிட்ட கடற்கரைகளில் இருந்து இலங்கைக்கு போதை பொருட்கள் சமீபகாலமாக அதிக அளவு கடத்தப்பட்டு வருகின்றன.
மேலும் கடல் வழியாக நடைபெறும் போதை பொருள் கடத்தல் சம்பவங்களை தடுக்க மத்திய, மாநில உளவுத்துறை, மாவட்ட பொலிஸார் , மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸ் விசாரணை
இந்நிலையில் கடந்த (07.09.2023) ஆம் திகதி வியாழக்கிழமை மண்டபம் அடுத்த வேதாளை எம்.ஜி.ஆர் நகரில் வசித்து வரும் சேதுராஜன் என்பவர் வீட்டில் இலங்கைக்கு கடத்துவதற்காக போதை பொருள் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸார் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர்.
இதன் போது வீட்டில் 6 பொதிகளில் 6 கிலோ ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப்பொருளின் சர்வதேச மதிப்பு 6 கோடி எனவும் ஐஸ் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் ஐஸ் போதை பொருட்களை சென்னையில் யாரிடம் இருந்து பெறப்பட்டது என்பது குறித்து பொலிஸார் தொடர்ந்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருவதாக மாவட்ட பொலிஸ் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இந்திய இலங்கை சர்வதேச கடல் எல்லை வழியாக இருநாட்டு பாதுகாப்பையும் மீறி பல கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருட்கள் படகுகளில் தொடர்ந்து கடத்தப்பட்டு வரும் சம்பவம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |



