மன்னாரில் சட்டவிரோதமாக கடல் அட்டைகளை கொண்டு சென்ற ஐவர் கைது
மன்னார் - நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட அச்சங்குளம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது சட்ட விரோதமான முறையில் பிடிக்கப்பட்டு பொதி செய்யப்பட்ட கடல் அட்டைகளை இடமாற்றம் செய்ய முயன்ற 5 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவமானது நேற்றைய தினம் (04.04.2024) நடைபெற்றுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மன்னார் பகுதியைச் சேர்ந்த 23 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சோதனை நடவடிக்கை
கடற்றொழில் நடைமுறைகளை பொருட்படுத்தாமல் மக்கள் மேற்கொள்ளும் சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைகளை ஒடுக்குவதற்காக கடற்படையானது தீவின் கரையோர மற்றும் கடற்பரப்புகளில் வழக்கமான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது.
இந்த முயற்சிகளின் தொடர்ச்சியாக வடமத்திய கடற்படை கட்டளைக்கு உட்பட்ட SLNS புஸ்ஸதேவ கடற்படைப் பிரிவின் அச்சங்குளம் முகாம் கடற்படை வீரர்கள் அச்சங்குளத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது சந்தேகத்தின் பேரில் 03 மோட்டார் சைக்கிள்களை சோதனையிட்டதில் பிளாஸ்டிக் கொள்கலன்களில் அடைக்கப்பட்ட 589 கடல் அட்டைகளுடன் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் சந்தேகநபர்கள் 05 பேரும் மீட்கப்பட்ட கடல் அட்டைகள், டைவிங் கியர் மற்றும் 03 மோட்டார்சைக்கிள்களுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக முருங்கன் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |