2026இல் 55000 வீடுகள் நிர்மாணிக்கப்படும்! ஜனாதிபதி அநுர உறுதி
இலங்கை வரலாற்றில் அரச அனுசரணையின் கீழ் அதிகளவான வீடுகள் நிர்மாணிக்கப்படும் ஆண்டாக 2026ஆம் ஆண்டு அமையும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக 20,000 முதல் 25,000 வரையிலான புதிய வீடுகள் நிர்மாணிக்கப்படும், வீடமைப்பு அதிகாரசபையால் ஏற்கனவே திட்டமிடப்பட்ட 31,000 வீடுகளுடன் சேர்த்து, இந்த ஆண்டில் மட்டும் மொத்தம் 55,000 வீடுகள் வரை நிர்மாணிக்கப்படும் என்றும் ஜனாதிபதி கூறினார்.
வீடுகள் நிர்மாணம்
டித்வா சூறாவளியால் வீடுகளை இழந்த மக்களுக்கு வீடுகளை மீண்டும் நிர்மாணிக்கும் திட்டத்தின் முதல் கட்டமாக, முற்றிலும் வீடுகளை இழந்து அதே இடத்தில் மீண்டும் கட்டக்கூடிய குடும்பங்களுக்கு வீடுகள் நிர்மாணிக்கப்படுகின்றன.
அதன்படி, அநுராதபுரம் மாவட்டத்தின் கல்னேவ, பலகல, பலுகஸ்வெவ, இபலோகம மற்றும் திரப்பனை பிரதேச செயலாளர் பிரிவுகளில் முற்றிலுமாக சேதமடைந்த 26 வீடுகளைப் புனரமைப்புக்கான இழப்பீடு நேற்று வழங்கப்பட்டது. அத்துடன், புதிய வீடுகளுக்கான நிர்மாணப் பணிகள் ஜனாதிபதியின் தலைமையில் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டன.

சிறந்த வாழ்க்கைத் தரத்தைக் கட்டியெழுப்ப நடவடிக்கை
இதன்போது ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில், இலங்கை வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில், இவ்வளவு பாரிய நட்டஈடு வழங்கி மக்களைப் பாதுகாக்கும் நடவடிக்கையை கடந்த ஆட்சியாளர்கள் மேற்கொள்ளவில்லை. அனர்த்தத்துக்கு முகம் கொடுத்த மக்களுக்கு அவர்கள் முன்பு இருந்ததை விடவும் சிறந்த வாழ்க்கைத் தரத்தைக் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
அதேபோல், மக்களுக்கு ஒரு சிறந்த வாழ்க்கைத் தரத்தை வழங்க வேண்டுமாயின், சிறந்த வருமானம், பிள்ளைகளுக்குச் சிறந்த கல்வி, ஆரோக்கியமான வாழ்க்கை, ஒரு நல்ல வீடு மற்றும் மன அமைதி ஆகியவை அவசியம் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
வடக்கை நோக்கி நகரும் காற்றழுத்தம்.. தீவிரமடையும் காற்றின் வேகம் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
அந்த 5 விடயங்களையும் நிறைவேற்றுவதற்காக அரசு அர்ப்பணிப்புடன் செயற்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


