வடக்கு மாகாண கடற்றொழில் அபிவிருத்திக்கு 500 மில்லியன் ஒதுக்கீடு
வடக்கு மாகாணத்தில் கடற்றொழில் அபிவிருத்திக்காக 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கரைச்சி பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் கருத்துரைத்த போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்திற்கு இந்த வருடம் 80 மில்லியன் ரூபாய் நிதி கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கடற்றொழில் அபிவிருத்தி
மேலும், குறித்த நிதி கடற்றொழில் அபிவிருத்திக்காக பயன்படுத்தப்படும் எனவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, இந்த ஒதுக்கீடுகளை முறையாகவும், பயனுள்ளதாகவும் பயன்படுத்த வேண்டும் எனவும், அதற்கு பயனாளிகளும் இணைந்து செயற்பட வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மக்கள் குற்றச்சாட்டு
மேலும், பிரதேச சபையால் பொருத்தப்பட்ட வீதி மின்விளக்குகள் தரமற்றவை எனவும், சட்ட விரோத செயற்பாடுகளுக்கு அவையும் காரணம் எனவும் பிரதேச மக்கள் அமைச்சரிடம் முறையிட்டுள்ளனர்.
இதன்போது கருத்து தெரிவித்த மக்கள்,
“பிரதேச சபையால் கிராமத்தில் முக்கிய பகுதிகளில் வீதி மின் விளக்குகள் அமைக்கப்பட்டது. அவை குறுகிய காலங்களில் ஒளிராமல் பழுதடைந்துள்ளது.
தரமான மின்விளக்குகளிற்கு உத்தேச அளவீடு மேற்கொண்டு நிதி ஒதுக்கி பின்னர் தரமற்ற மின்விளக்குகளை பொருத்தியுள்ளார்களென சந்தேகிக்கிறோம்.
இதற்கு நிரந்தரமான தீர்வு வேண்டும். முக்கிய இடங்களில் மின்விளக்குகள் இவ்வாறு எரியாமையால் குற்ற செயல்கள் நடக்கிறது.
வாள்வெட்டு சம்பவங்களும் நடக்கிறது. அண்மையில் ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றி சென்ற பேருந்து மறிக்கப்பட்டு வாள்வெட்டு சம்பவமும் இடம்பெற்றது. இவ்வாறான குற்ற செயல்கள் அண்மையில் அதிகரித்துள்ளது” என குற்றம் சுமத்தியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |