திடீர் சுகயீனம் காரணமாக 50 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி
ஹட்டன் (Hatton) கல்வி வலயத்திற்குட்பட்ட டிக்கோயா ஸ்ரீவாணி ஆரம்ப பாடசாலையில் கல்வி பயிலும் சுமார் 50 மாணவர்களுக்கு ஏற்பட்ட திடீர் சுகயீனம் தொடர்பாக, அம்பகமுவ சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் பொது சுகாதார பரிசோதகர்கள் (11) இன்று குறித்த பாடசாலைக்கு சென்று பரிசோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
மேற்படி, பாடசாலையில் 1,2ஆம், 3,4ஆம் மற்றும் 5ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களில் 50 பேரே இவ்வாறு, திடீரென சுகயீனமடைந்துள்ளனர்.
ஆதார வைத்தியசாலையில் அனுமதி
குறித்த மாணவ, மாணவிகளுக்கு நேற்று (10.01.2025) மாலை முதல் தலைச்சுற்றல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து, பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
50 மணாவர்களில் 25 மாணவர்கள் டிக்கோயா ஆதார வைத்தியசாலையிலும், ஏனைய 25 மாணவர்கள் ஹட்டன் நகரத்தில் உள்ள தனியார் வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.
டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 25 மாணவர்களில் 22 மாணவர்கள் சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பியுள்ளனர்.
மீதமுள்ள மூன்று மாணவர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குடிநீரினால் எதுவும் பிரச்சினைகள்
மாணவர்களின் நிலைமை பாரதூரமாக இல்லை எனவும் வைத்தியசாலையில் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
நேற்று காலை (10.01.2025) பாடசாலையில் மாணவர்களுக்கு காலை உணவாக சோறு, போஞ்சி, பருப்பு மற்றும் கீரை ஆகியவற்றை வழங்கியதாகவும், எனினும், அந்த உணவை சாப்பிடாத மாணவர்களும் நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதனால், பாடசாலையில் உள்ள குடிநீரினால் எதுவும் பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகித்த அம்பகமுவ சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் பொது சுகாதார பரிசோதகர்கள் இன்றைய தினம் (11.01.2025) பாடசாலைக்கு விஜயம் செய்து குடிநீர் மாதிரிகளை சேகரித்துள்ளதோடு, தொடர்ந்தும் இச்சம்பவம் குறித்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |