தேசிய பட்டியலில் 50% ஆசனங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் - சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே
தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைகளில் பொருத்தமான சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும், அத்துடன் தேசிய பட்டியலில் 50% ஆசனங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு, நாடாளுமன்றத்தின் தேர்வுக் குழுவுக்கு முன்மொழிந்துள்ளது.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் இந்த முன்மொழிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
நாடாளுமன்றம், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைப்புகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் 30%ஆக அதிகரிக்கப்பட வேண்டும் என்று மகளிர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டமைப்பின் சார்பில் பேசிய அதன் தலைவர், இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
பெண்களுக்கு வேட்புமனு பிரச்சினையாக உள்ளது. தற்போதைய விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை பெண்களுக்கு அவ்வளவு சாதகமாக இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
நாட்டின் வன்முறை அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறைத்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசியல் கட்சிகளில் பெண்களுக்கு உயர் பதவிகள் வழங்கப்படாதது குறித்தும் இந்த குழு விவாதித்தது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முறையிலும், முன்னர் முன்மொழியப்பட்ட மாகாணசபைத் தேர்தல் முறையிலும் பெண்களின் பிரதிநிதித்துவத்திற்கு அதிக இடம் இருப்பதாகச் சபைத் தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்தன இந்த நிகழ்வில் தெரிவித்துள்ளார்.
பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க தற்போதைய தேர்தல் முறையைப் பயன்படுத்த முடியாது என்று அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் கூறியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க, தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கையை தீர்மானிக்க ஒரு பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
பெண் அரசியல் என்பது ஒரு கலாச்சார பிரச்சினை என்று அதுரலியே ரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.
அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் சிவில் சமூக அமைப்புகள் பெரும் பங்காற்ற முடியும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
மகளிர் அரசியல் கல்வியகத்தின் தலைவர் சட்டத்தரணி நிமல்கா பெர்னாண்டோ, உள்ளூராட்சி தேர்தல் முறையில் தற்போதைய 25% இட ஒதுக்கீட்டைப் பராமரிப்பது அவசியம் என்று கூறினார்.
அரசியல் கட்சிகள் பெண்களுக்குத் தலைமைத்துவ பயிற்சியை வழங்க வேண்டும் என்றும் நாடாளுமன்றம் மற்றும் மாகாண சபைகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் 30%ஆக அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார்.
இந்தக் குழுக் கூட்டத்தில் ஐந்து பெண்கள் அமைப்புகள் தங்கள் முன்மொழிவுகளை முன்வைத்தன. குழுவின் அடுத்த கூட்டம் ஆகஸ்ட் 11 அன்று நடைபெற உள்ளது.
அமைச்சர்கள் நிமல் சிறிபால டி சில்வா, பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனுரா திஸாநாயக்க, கபீர் ஹாசிம், ரஞ்சித் மத்தும பண்டார, எம்.ஏ.சுமந்திரன், மனோ கணேசன், மதுர விதானகே மற்றும் சாகர காரியவசம் ஆகியோரும் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.