தனியார் துறையினருக்கு உடனடியாக 5 ஆயிரம் ரூபாவை வழங்க முடியாது
ஐந்தாயிரம் ரூபாய் கொடுப்பனவை தனியார் துறை ஊழியர்களுக்கு வழங்குவது தொடர்பான பேச்சுவார்த்தை, தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா (Nimal Sripala De Silva) மற்றும் இலங்கையின் தனியார் தறையை பிரதிநிதித்துவப்படுத்தும் சேவைகள் மற்றும் உற்பத்தி துறையினருக்கும் இடையில் இன்று நடைபெற்றது.
அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் தொழில் திணைக்களத்தில் இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
இதன் போது கருத்து வெளியிட்டுள்ள தனியார் துறையின் பிரதிநிதிகள், கடந்த காலத்தில் நாட்டில் தொழில் மற்றும் சேவை துறைகளை வீழ்ச்சியின்றி நடத்தி செல்ல தமக்கு மேலதிகமாக பணம் செலவானதாக கூறியுள்ளனர்.
மேலும் ஏற்றுமதி துறையில் ஏற்பட்டுள்ள பல்வேறு சிரமங்கள் காரணமாக ஏற்றுமதி வருமானம் குறைந்துள்ளது. சுங்க கட்டணம் அதிகரிப்பு, கொள்கலன்கள் வருவது குறைந்துள்ளமை, உற்பத்தி செலவு அதிகரிப்பு, மூலப் பொருட்களை இறக்குமதி செய்வதில் காணப்படும் பிரசசினைகள், அதற்காக செலவிட வேண்டிய பணம், அரசாங்கம் வழங்கிய கடன் நிவாரண காலம் எதிர்வரும் மார்ச் மாதத்துடன் நிறைவடைவது, வங்கிகளில் அறவிடப்படும் அதிக வடடி போன்ற பிரச்சினைகளால் இலங்கையின் தனியார் துறையினர் பாரதூரமான நெருக்கடிக்குள் சிக்கியுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதனால், இப்படியான சூழ்நிலையில் தனியார் துறையினருக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை உடனடியாக வழங்க முடியாது எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
இங்கு கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, நிலவும் பொருளாதார சிரமங்களுக்கு மத்தியில் தனியார் துறை ஊழியர்களுக்கு ஏதேனும் ஒரு விதத்தில் கொடுப்பனவுகளை வழங்குமாறு கோரியுள்ளார்.
நிலவும் நிலைமையில், நாட்டின் பொருளாதாரத்தை வலுவாக முன்னெடுத்துச் செல்ல வேண்டுமாயின் ஊழியர்கள் மாத்திரமல்லாது முதலாளிமாரும் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால், பேச்சுவார்த்தையில் முன்வைக்கப்பட்ட விடயங்களை பொது ஆவணமாக தனக்கு வழங்குமாறும், அதனை அமைச்சரவைப் பத்திரமாக துரிதமாக சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் நிமல் சிறிபால டி சில்வா கூறியுள்ளார்.