ஹோமாகம தீ விபத்தில் 5 பேர் பலி..! விசாரணையை தீவிரப்படுத்திய பிரதி அமைச்சர்
ஹோமாகம - கட்டுவன தொழிற்பேட்டையில் உள்ள ஒரு தொழிற்சாலையில் ஏற்பட்ட பெரும் தீ விபத்து குறித்து முழுமையான விசாரணை நடத்தி, உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு தொழிலாளர் பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க, தொழிலாளர் திணைக்களத்தின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று(21.07.2026) இடம்பெற்ற நிலையில், இதுவரையில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பில் தீவிர விசாரணை
உயிரிழந்த ஊழியர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்த பிரதி அமைச்சர், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவார்கள் என்றும் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக நடத்தப்படும் விசாரணைகளில் சில அறிவுரைகளை பிரதி அமைச்சர் வழங்கியுள்ளதாக தெரவிக்க்கப்பட்டுள்ளது.
இதன்படி, தீ விபத்துக்கு வழிவகுத்த உடனடிக் காரணிகள், தொழிற்பேட்டையில் தீ பாதுகாப்பு மற்றும் தொழில் பாதுகாப்புத் தரநிலைகள் பேணப்பட்டதா என்பது, ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் அவசரகால வெளியேறும் நடைமுறைகளுக்கான தேவையான வசதிகள் இருந்தனவா என்பது, தொழிற்சாலைகள் கட்டளைச் சட்டம் மற்றும் அது தொடர்பான தொழில் பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளனவா என்பதையும், ஏதேனும் அலட்சியமான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பதையும் விசாரிக்குமாறு, தொழிலாளர் ஆணையாளர் நாயகம் நதீக வத்தலியத்தவுக்கு பிரதியமைச்சர ் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், அபாயகரமான மற்றும் இடர் நிறைந்த பணியிடங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிலைமைகள் தொடர்பில் நாடு தழுவிய அளவில் ஒரு சிறப்பு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
கட்டுவான தீ விபத்தில் 5 பேர் பலி..! பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட தொழிலாளர்கள்: தீயை கட்டுப்படுத்த கடும் பிரயத்தனம்