கொழும்பில் உள்ள நடுத்தர மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்
கொழும்பில் சிறு மற்றும் நடுத்தர மக்களுக்காக 5 வீட்டுத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (26.10.2023) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்திற்கான இணக்கப்பாட்டினை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சீன அரசாங்கத்துடன் செய்துகொண்டுள்ளார் என்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
2024 ஆம் வரவு செலவுத் திட்டத்தின் பின்னர் வீடமைப்பு அதிகார சபையில் தடைப்பட்ட திட்டங்களை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும். சிறு மற்றும் நடுத்த தர வருமானம் ஈட்டும் மக்களுக்காக கொழும்பில் 05 வீட்டுத் திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
வேலைத்திட்டங்களில் மோசடிகள்
அதற்காக மொத்தமாக 350 டொலர் மில்லியன்கள் செலவாகும். ஜனாதிபதியின் அண்மைய சீனாவிற்காக விஜயத்தின் போது ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டிற்கு அமைய, 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை கிடைத்துள்ளன.
இத்திட்டத்தின் கீழ் 2500 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உரிய நிதி முகாமைத்துவத்தின் காரணமாக வீடமைப்பு அதிகாரசபையினால் ஆரம்பிக்கப்பட்டு இடைநிறுத்தப்பட்ட வேலைத்திட்டங்களை மீள ஆரம்பிக்கும் இயலுமை கிட்டியுள்ளது.
2024 வரவு செலவு திட்டத்துடன் அந்த திட்டங்களை ஆரம்பிக்க எதிர்பார்த்திருக்கிறோம். சில வேலைத்திட்டங்களில் மோசடிகள் நிகழ்கின்றன. அவ்வாறான செயற்பாடுகளை தடுப்பதற்கான நடவடிக்கைகளை அமைச்சு முன்னெடுக்கும்.
அத்தோடு கொழும்பில் நீர் நிரம்புவதை தடுப்பதற்கு தாழ்நில அபிவிருத்தி அதிகார சபையினால் பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
வீடமைப்பு அமைச்சின் உயரிய பங்களிப்பு
கடல் தாவரங்கள் மற்றும் சதுப்பு நிலங்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைளும் எடுக்கப்பட்டுள்ளன. வௌ்ளப் பாதுகாப்பிற்கான மக்களிடத்திலிருந்து பெறப்பட்ட காணிகள் அழிவடைகின்றன.
காணிகளை கையகப்படுத்தும்போது வழங்கப்பட வேண்டிய நட்டயீடுகளும் சிலருக்கு வழங்கப்படவில்லை. அந்த நிலைமைக்கு மாறாக கொழும்பு நகரில் பிரதான காணிகளை பெற்றுக்கொள்ளும்போது அறிவியல் முறைமையொன்றை பின்பற்ற எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டின் அபிவிருத்திக்காக முன்னெடுக்கும் பயணத்தில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு உயரிய பங்களிப்பை வழங்கும் என தெரிவித்துள்ளார்.