இடிந்து விழுந்த ஹட்டன் - விக்டன் தோட்ட பாலம் : தடைப்பட்டுள்ள பேருந்து சேவை
நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக ஹட்டன் - விக்டன் பகுதியில் அமைந்துள்ள சீமெந்து பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது.
இதனால் பேருந்து சேவை தடைப்பட்டுள்ளதுடன், தோட்டத் தொழிலாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மக்கள்
விக்டன் தோட்டத்தில் 5 பிரிவுகளில் வசிக்கும் மக்களுக்கு அருகிலுள்ள நகரம் ஹட்டன் ஆகும். மேலும் அந்த வழித்தடத்தில் தினமும் சுமார் 6 தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

பாதிக்கப்பட்ட விக்டன் தோட்டத் தொழிலாளர்கள், இதற்கு முன்பும் பாலம் இடிந்து விழுந்ததாகவும், அப்போது தோட்டத் தொழிலாளர்களே தற்காலிகமாக சரிசெய்ததாகவும் தெரிவித்துள்ளதுடன் தற்போது பாலத்தின் ஒரு பெரிய பகுதி இடிந்து விழுந்துள்ளதால், தங்களால் அதை சரிசெய்ய முடியவில்லை என கூறுகின்றனர்.
மேலும், விக்டன் பகுதி மக்கள், தங்கள் பகுதியில்தான் ஆண்டு முழுவதும் அதிக மழை பெய்கிறது என்றும், அந்த மழையின் காரணமாக பல இடங்களில் பெரிய பள்ளங்கள் ஏற்பட்டு, போக்குவரத்து பாதிப்படைகிறது என்றும் கூறுகின்றனர்.
போக்குவரத்து சிரமம்
உடைந்த பாலம் வரை பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளதால், குழந்தைகளும் ஆசிரியர்களும் விக்டன் தோட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு சுமார் 1 கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டியுள்ளது.
மேலும், தற்போதைய சூழ்நிலை காரணமாக, தங்கள் தோட்டத்திலிருந்து இந்த உடைந்த பாலம் வரை செல்வதற்கு ஒரு முச்சக்கர வண்டியில் பயணித்தால் சுமார் 500 ரூபா கட்டணம் வசூலிப்பதாக கூறுகின்றனர்.

அத்துடன் தேர்தல் காலத்தில் உடைந்த பாலம் மீண்டும் கட்டப்படும் என்று அரசியல்வாதிகள் வாக்குறுதி அளித்தபோதிலும், அந்த வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.
எனவே, ஹட்டன் - விக்டன் மக்கள், உடைந்த பாலத்தை சரிசெய்ய வேண்டும் அல்லது நீடித்து நிலைக்கும் ஒரு புதிய பாலம் கட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.






YOU MAY LIKE THIS VIDEO
ஐரோப்பாவில் ரத்தான நூற்றுக்கணக்கான விமானங்கள்... வெளிநாடுகளில் சிக்கிக்கொண்ட குடும்பங்கள் News Lankasri