வடக்கு - கிழக்கில் இடம்பெற்ற தந்தை செல்வாவின் 45 ஆவது நினைவு தினம் அனுஷ்டிப்பு (Video)
தமிழ்த்தேசிய இனத்தின் தந்தை செல்வநாயகத்தின் 45 ஆவது நினைவு தினம் இன்று (26) வடக்கு - கிழக்கில் பல்வேறு இடங்களில் அனுஷ்டிப்பு.
மட்டக்களப்பு
தந்தை செல்வாவின் 45வது சிரார்த்த தினம் மட்டக்களப்பில் அனுஷ்டிக்கப்பட்டது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் 45வது சிரார்த்த தினம் மட்டக்களப்பு தந்தை செல்வா நினைவு முற்றத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு கிளை ஏற்பாட்டில் இடம்பெற்றது.
கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பொன்.செல்வராசா தலைமையில் இவ் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
இதன்போது தந்தை செல்வாவின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து தீபமேற்றி, மலரஞ்சலி செலுத்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் உள்ளடங்களாக தமிழரசுக் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் அங்கத்தவர்கள் மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
யாழ்ப்பாணம்
தமிழ்த்தேசிய இனத்தின் தந்தை செல்வநாயகத்தின் 45 ஆவது சிராத்த நினைவேந்தல் தினம் இன்று யாழ். துறையப்பா விளையாட்டு அரங்கிற்கு அருகாமையில் உள்ள அன்னாரின் நினைவிடத்து தூபியில் இடம்பெற்றது.
இங்கு தந்தை செல்வாவின் தூபிக்கு மலர்மாலை அணிவித்து நினைவஞ்சலி செலுத்தப்பட்டதுடன் அமரரின் கல்லறையில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதன்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் சோ.மாவைசேனாதிராஜா, தமிழர் விடுதலைக்கூட்டணியின் பொதுச்செயலாளர் நாயகம் ஆனந்தசங்கரி, தந்தை செல்வா நினைவு அறங்காவற் குழுவின் தலைவர் கலாநிதி சு.ஜெயநேசன், பேராசிரியர் சங்கரன் விஜேசந்திரன் உள்ளிட்ட நலன் விரும்பினர்கள், தந்தைசெல்வாவின் நினைவுக்குழுவின் உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
வவுனியா
வவுனியாவில் இன்று தந்தை செல்வாவின் நினைவு தினம் தமிழரசுக்கட்சியினால் அனுஸ்டிக்கப்பட்ட நிலையில் இருவர் மாத்திரமே கலந்து கொண்டிருந்தனர்.
தமிழரசுக்கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் 45 ஆவது நினைவு தினம் தமிழர் பகுதிகளில் இன்று அனுஸ்டிக்கப்பட்டது.
இந்நிலையில் வவுனியாவிலும் நகர மத்தியில் உள்ள அவரது சிலையடியில் 9 மணிக்கு நிகழ்வுகள் வவுனியா மாவட்ட தமிழரசுக்கட்சியின் தந்தை செல்வா அவையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
எனினும் குறித்த நிகழ்வுக்கு வவுனியா நகரசபை உறுப்பினர் நா. சேனாதிராஜாவுடன்
மற்றுமொரு தமிழரசுக்கட்சி உறுப்பினர் மாத்திரமே கலந்துகொண்டு மாலையை
அணிவித்திருந்தனர்.



