இஸ்ரேலில் கைதான இலங்கையர்! கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் எச்சரிக்கை
சட்டவிரோதமான ஜோர்டான் எல்லை ஊடாக இஸ்ரேலுக்குள் நுழைந்த இலங்கை பிரஜை ஒருவர் இஸ்ரேல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்தநாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் 43 வயதுடையவரெனத் தெரிவிக்கப்படுகின்றது.
கடும் நடவடிக்கை
அவருக்கு எதிராக இஸ்ரேலுக்குள் சட்டவிரோதமாக நுழைந்தமை மற்றும் வெளிநாட்டு குடியுரிமை கொண்ட ஒருவரை சட்டவிரோதமாக ஏற்றிச் சென்றமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக இஸ்ரேல் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இலங்கையருக்கு எதிராக சட்டத்தின் படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இஸ்ரேல் பொலிஸாரின் சர்வதேச பிரிவான இன்டர்போல் கிளை அறிவித்துள்ளது.
2023 செப்டம்பர் 7 ஆம் திகதி இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட ஹமாஸ் தாக்குதலுக்கு முன்னர், எகிப்து, ஜோர்டான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கிடையே செயல்பட்ட மனித கடத்தல் வலையமைப்புகள் ஊடாக பல இலங்கையர்கள் சட்டவிரோதமாக இஸ்ரேலுக்கு அழைத்து வரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பொதுமக்களிடம் கோரிக்கை
எனினும், அதன் பின்னர் எல்லைப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, இத்தகைய மனித கடத்தல் நடவடிக்கைகள் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசாங்க மற்றும் தனியார் துறைகள் ஊடாக இலங்கையர்களுக்கு இஸ்ரேலில் சட்டப்பூர்வமான வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், மனித கடத்தல்காரர்கள் மூலம் சட்டவிரோதமாக அந்நாட்டிற்குள் நுழைய முயற்சிப்பது மிகுந்த அபாயகரமானதும் உயிருக்கு அச்சுறுத்தலான செயலுமாகும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக தற்போது போர்ச் சூழல் நிலவி வரும் நிலையில், பாலைவனப் பகுதிகள் வழியாக எல்லைகளை சட்டவிரோதமாகக் கடப்பது உயிருக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், மனித கடத்தல்காரர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறும், இத்தகைய சட்டவிரோதப் பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என்றும் பொதுமக்களிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.