யாழில் களவாடி அடகு வைக்கப்பட்ட 43 பவுண் தங்க நகை - சந்தேக நபர்கள் மூவருக்கும் விளக்கமறியல்
யாழ். குடாநாட்டில் ஆட்கள் இல்லாத வேளைகளில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைத் திருட்டில் ஈடுபட்டு வந்த மூவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதோடு, அடகு வைக்கப்பட்டிருந்த 43 பவுண் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த மீட்பு நடவடிக்கையை நேற்று(24.08.2026) சாவகச்சேரி பொலிஸார் முன்னெடுத்திருந்தனர்.
மீட்க்கப்பட்ட தங்க நகை
மீட்கப்பட்ட தங்க நகைகளின் பெறுமதி ஒரு கோடி 50 இலட்சம் ரூபா என சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த ஜூலை மாதம் ஒன்பதாம் திகதி சாவகச்சேரி நகரிலுள்ள நகைக் கடை உரிமையாளரின் வீட்டிலிருந்து 17 பவுண் தங்க நகைகள் களவாடப்பட்டதாக சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து சிசிடிவி காணொளியின் உதவியுடன் சாவகச்சேரிப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இதன்போது யாழ் நகரில் வைத்து நவாலியை சேர்ந்த பிரதான சந்தேக நபர் நேற்று முன்தினம்(22) கைது செய்யப்பட்டhர்.

பிரதான சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையில் குறித்த நபர், கோப்பாய் பிரதேசத்தில் மூன்று வீடுகளிலும், வட்டுக்கோட்டை, சாவகச்சேரி ஆகிய இடங்களில் தலா ஒவ்வொரு வீடுகளிலுமாக ஐந்து வீடுகளில் தங்க நகைகளைத திருடியமை தெரியவந்துள்ளது.
அதனையடுத்து சந்தேக நபருக்கு உதவிய ஊர்காவற்றுறையைச் சேர்ந்த பெண் ஒருவரையும், நவாலியைச் சேர்ந்த ஆண் ஒருவரையும் சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தல்
அத்துடன் அடகு வைத்த பணத்தில் கொள்வனவு செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்றையும் சாவகச்சேரிப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இதனையடுத்து சந்தேக நபர்கள் சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர். இதன்போது சந்தேக நபர்களை 14 நாட்கள் விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், அடகு கடைகளில் வைக்கப்பட்ட தங்க நகைகளை கட்டுக்காவலுக்குள் கொண்டு வருவதற்கான உத்தரவையும் பொலிஸார் பெற்றுள்ளனர்.
அதற்கமைய ஊர்காவற்றுறையிலுள்ள அரச வங்கியில் அடகு வைக்கப்பட்டிருந்த 26 பவுண் தங்க நகைகளையும், யாழ் நகரிலுள்ள தனியார் அடகு கடையில் அடகு வைக்கப்பட்ட 17 பவுண் தங்க நகைகளையும் சாவகச்சேரிப் பொலிஸார் மீட்டுள்ளனர்.