மட்டக்களப்பில் வான் ஒன்றை தீ வைத்து எரித்த 4 பேருக்கு கடூழிய சிறைத்தண்டனை
ஏறாவூர்- வந்தாறுமூலை மாவடிவேம்பு பகுதியில் விபத்துக்குள்ளான வான் ஒன்றை தீ வைத்து எரித்த 4 பேருக்கு 3 வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஒரு இலட்சம் ரூபா அபராதமாக செலுத்துமாறு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே. பிரபாகரன் நேற்று (20.11.2026) தீர்ப்பளித்தார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் திகதி குருநாகலில் இருந்து அக்கரைப்பற்றுக்கு பிரயாணித்த 66 இலட்சம் ரூபா பெறுமதியான வான் ஒன்று ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள வந்தாறுமூலை மாவடிவேம்பு பகுதியில் ஒருவருடன் மோதி விபத்துக்குள்ளானது.
சிறைத் தண்டனை
இதையடுத்து விபத்துக்குள்ளான வானை தீயிட்டு எரித்த சித்தாண்டி மற்றும் வந்தாறுமூலை பிரதேசங்களைச் சேர்ந்த வேலுப்பிள்ளை நந்தகுமார், வேலுப்பிள்ளை சுதர்சன், ஜெகநாதன் ஜெய சுதர்சன், சிவகுமார் ஆகியோரை கைது செய்து அவர்களுக்கு எதிராக பொலிசார் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.

இதனை தொடர்ந்து வழக்கு விசாரணை நடைபெற்ற பின்னர் 2016ஆம் ஆண்டு வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை இடம்பெற்று வந்த நிலையில் குறித்த நான்கு பேரும் குற்றவாளிகள் என நீதிமன்றில் கடந்த ஒக்டோபர் 30 ம்திகதி இனங்காணப்பட்டு தண்டனைக்கான தீர்ப்பு திகதி அறிவிக்கப்பட்டது.
தண்டணைச் சட்டக்கோவை 32ம் பிரிவில் 418 பிரிவில் குற்றமான 66 இலட்சம் ரூபா பெறுமதியான சொத்தான வானை சேதம் விளைவித்து தீ வைத்து எரித்த குற்றத்திற்கு 4 பேருக்கும் 3 வருட கடூழிய சிறைத் தண்டனையும் தலா ஒருவர் 25 ஆயிரம் ரூபா வீதம் ஒரு இலட்சம் ரூபாவை அபராதமாக செலுத்துமாறு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே. பிரபாகரன் தீர்ப்பளித்தார்.