கொழும்பில் இரவு விடுதிக்குள் நடந்த மோசமான செயல் - பெண்கள் உட்பட வெளிநாட்டவர்கள் கைது
கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள இரவு விடுதிகளுக்கு கொக்கெயின் போதைப்பொருளை விநியோகித்து வந்த 4 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொள்ளுப்பிட்டியில் இரவு விடுதி மற்றும் முன்னணி சுப்பர் மார்க்கெட் வளாகம் என்பவற்றில் கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனைகளின்போது, குறித்த நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் இரு பெண்களும் உள்ளடங்குவதுடன், அவர்கள் நால்வரும் ஜமைக்கா நாட்டைச் சேர்ந்தவர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
வெளிநாட்டவர்கள் கைது
கைது செய்யப்பட்ட போது, அவர்களிடமிருந்து ஒரு கிலோகிராமிற்கும் அதிகமான கொக்கெயின் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களிடமிருந்து முறையே 1 கிலோகிராம் 1 கிராம், 20 கிராம், 16 கிராம் மற்றும் 12 கிராம் என்ற அளவில் தனித்தனியாக வைக்கப்பட்டிருந்த கொக்கெயின் போதைப்பொருட்களைச் சோதனை நடத்திய அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.