கதிர்காம பாதயாத்திரையில் 3ஆவது யாத்திரிகர் மரணம்
கதிர்காம பாதயாத்திரையில் பயணித்த மூன்றாவது யாத்திரிகர் நேற்று(13.07.2026) காலை திடீரென உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குமுக்கனுக்கும் நாவலடிக்கும் இடையிலுள்ள கஜபா வெட்டை எனும் இடத்தில் இடம்பெற்றுள்ளது.
பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணை
ஏறாவூர், களுவன்கேணியைச் சேர்ந்த பிரதி அதிபர் கே.பாக்கியராஜா (வயது 52) என்பவரே இவ்விதம் மரணமான மூன்றாவது யாத்திரிகர் ஆவார்.

மாரடைப்பு காரணமாக இவர் மரணமடைந்தார் என்று ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனின் மைத்துனர் (தங்கையின் கணவர்) ஆவார். இவரது சடலம் தற்சமயம் பாணமை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இவரை லாகுகலை பிரதேச பிரதம பொதுச் சுகாதார பரிசோதகர் எஸ்.புனிதராஜன் பார்வையிட்டார். இதேவேளை பாதயாத்திரையின் போது நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரண்டாவது யாத்திரிகர் காரைதீவைச் சேர்ந்த நடராஜா அருள்குமார் மரணமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் யாத்திரிகர் மரணம் கடந்த 8 ஆம் திகதி பொத்துவில் குண்டுமடு பகுதியில் வைத்து இடம்பெற்று இருக்கின்றது. அவர் வவுனியாவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.