சஹ்ரானின் சகாவுக்கு 39 ஏக்கர் நிலம் - விசாரணை நடத்துமாறு ஜனாதிபதிக்கு கடிதம்
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குச் சொந்தமான புன்னக்குடா கடற்கரைக்கு அருகில் உள்ள 39 ஏக்கர் காணியை சஹ்ரான் அணியின் முக்கியஸ்தர் ஒருவரின் பெயருக்கு மாற்றியமை சம்பந்தமாக குற்றவியல் விசாரணை திணைக்களம் ஊடாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு மழைக்காடுகளை பாதுகாக்கும் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜயந்த விஜேசிங்க( Jayantha Weerasinghe), ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம்(Gotapaya Rajapaksa) கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
39 ஏக்கர் நிலம், கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 ஆம் திகதி இலக்கம் 4551 என்ற காணி உறுதியின் மூலம் எழுதிக்கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அது மட்டக்களப்பு காணிப் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த காணியைச் சம்பந்தப்பட்ட நபர் 5 கோடி ரூபாய் கொடுத்து கொள்வனவு செய்துள்ளார். அந்த பணம் இந்த நபருக்கு எப்படி கிடைத்தது என்பது குறித்து விசாரிக்குமாறு குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு உத்தரவிடுமாறும் விஜேசிங்க ஜனாதிபதியிடம் கேட்டுள்ளார்.
குறித்த நபர் அந்த காணியைக் கொள்வனவு செய்த பின்னர், அதனை சஹ்ரான் குழுவினர் பயிற்சிகளைப் பெற வழங்கியுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
காத்தான்குடி அலியார் சந்தியில் இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவம் தொடர்பாக சஹ்ரானுடன் இணைந்து செயற்பட்டதாக இந்த நபர் உள்ளிட்ட குழுவினருக்கு எதிராக காத்தான்குடி பொலிஸார் வழக்கு தொடர்ந்துள்ளனர் எனவும் ஜயந்த விஜேசிங்க கூறியுள்ளார்.
எனினும் அந்த நபர் பொலிஸாரினால் கைது செய்யப்படவில்லை. 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி நடந்த ஈஸ்டர் குண்டு தாக்குதலின் பின்னர், இந்த நபர் கைது செய்யப்பட்டு தற்போது வரை தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த நபர் உட்பட அவரது அணியினர் முன்னாள் அமைச்சர் மற்றும் அவரது சகோதரருடன் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டிருந்தனர் எனவும் காணியைக் கொள்வனவு செய்ய இவர்களின் பணம் கிடைத்ததா என்ற சந்தேகம் இருப்பதால், உரிய விசாரணைகளை நடத்துமாறு விஜேசிங்க தனது கடிதத்தின் ஊடாக ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
