மட்டக்களப்பில் வெள்ளத்தால் 380 ஏக்கர் நெற்செய்கை முற்றாக பாதிப்பு
மட்டக்களப்பு (Batticaloa)-ஓட்டடி முன்மாரி வயற்கண்டத்தில் செய்கை பண்ணப்பட்டிருந்த 380 ஏக்கர் நெற்செய்கையும், அண்மையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் முற்றாக சேதடைந்துள்ளதாக ஆதவன் கமநல அமைப்பின் செயலாளர் சந்திரசேகரன் கருணைராஜன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இந்த பெரும்போகத்தில் நாம் செய்துள்ள நெற்செய்கை அனைத்தையும் அண்மையில் ஏற்பட்ட பெருவெள்ளம் அள்ளிச் சென்றுள்ளது.
இதனால் வயல்கள் அனைத்தும் உடைப்பெடுத்து, நெற்பயிர்கள் அனைத்தும் சேதமாக்கப்பட்டு அழுகிப்போய் கிடக்கின்றன. இதனை மீண்டும் பராமரித்து அறுவடை செய்வதென்பது சாத்தியமற்ற விடயமாகும். சுமார் 70000 ரூபாவை ஒரு ஏக்கருக்காக விவசாயிகள் செலவு செய்துள்ளார்கள்.
அழிவுகளுக்குரிய மானியத் தொகை
இருந்த போதிலும் கடந்த காலங்களில் ஏற்பட்ட வெள்ள அனர்த்த அழிவுகளுக்குரிய மானியத் தொகையாக 6000 தொடக்கம் 8000 ரூபா வீதம் தான் ஏக்கருக்கு கிடைத்தது. இந்த நிதியை வைத்து எமது விவசாயிகள் விதை நெல்லைக்கூட பெறமுடியாத சூழலாகும்.
எனவே எமது விவசாயிகளை அழிவிலிருந்து மீட்டெடுப்பதற்காக வேண்டி தற்போது ஆட்சிபீடம் ஏறியிருக்கின்ற அரசாங்கம் நல்ல முறையில் செயற்படும் என அனைவரும் தெரிவிக்கின்றார்கள். அதனைச் செயலில் காட்டும் என விவசாயிகளாகிய நாம் நம்புகின்றோம்.
எதிர்காலத்தில் விவசாயிகளை அழிவிலிருந்து மீட்டெடுத்து வறுமையிலிருந்து விடுபட வைப்பதற்கு அரசாங்கம் உரியவேளையில் மானியத்தொகையை வங்குவதோடு மழை வெள்ளத்தினால் சேதமடைந்துள்ள வயல் நிலங்களையும் புனரமைப்புச் செய்து தரும் என நாம் நம்புகின்றோம்” என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |