மட்டு சந்திவெளியில் 35 வருட யுத்தத்தில் பின்னடைந்த கல்வி: வலயக்கல்வி பணிப்பாளர் தினகரன் ரவி
மட்டக்களப்பு(Batticaloa) - சந்திவெளியில் 35 வருட யுத்தத்தில் பின்னடைந்த கல்வி இன்றுவரை மீள முடியாதளவிற்கு காணப்படுகின்றது என திருகோணமலை வலயக்கல்வி பணிப்பாளர் தினகரன் ரவி தெரிவித்துள்ளார்.
சந்திவெளி இராசையா இலவச கல்வி நிலையம் 100 மாணவர்களுக்கு இலவசமாக நடாத்திய 6 மாதகால ஆங்கில பேச்சு பயிற்சியில் சாதனை படைத்த 13 மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று முன்தினம்(08) இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
கௌரவிப்பு நிகழ்வு
இந்நிகழ்வில், கல்வி நிலைய ஸ்தாபகர் அகிலன் தனது சொந்த நிதியின் மூலம் 6 மாதகால ஆங்கில பேச்சு பயிற்சியை பூர்த்தி செய்து அதன் பரீட்சையில் சாதனை படைத்த முதலாம் இடத்தை பெற்ற மாணவிக்கு மடிக்கணினி வழங்கியுள்ளார்.
இதேவேளை, இரண்டாம் மூன்றாம் இடங்களை பெற்ற மாணவர்களுக்கு ஸ்மாட் போன் வழங்கப்பட்டதுடன் ஏனைய மாணவவர்களுக்கு பெறுமதியான பொருட்களையும் சான்றிதழ்களையும் வழங்கி கௌரவித்துள்ளனர்.
இராசையா இலவச கல்வி நிலையத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற கௌரவிப்பு நிகழ்வில், அதிதிகளாக இலவச கல்வி ஸ்தாபகர் அகிலன் என்றழைக்கப்படும் இராசையா அகிலேஸ்வரன், திருகோணமலை வலயக்கல்வி பணிப்பாளர் தினகரன் ரவி, ஓய்வு பெற்ற ஆசிரியர் சின்னத்தம்பி குழந்தைவேல், ஓய்வு பெற்ற அதிபர் மயில்வாகனம் சிவசுந்தரம் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.