அதிரடி காட்டும் உக்ரைன் - 35 ஆயிரம் ரஷ்ய படை வீரர்கள் பலி
போர் தொடங்கியதில் இருந்து இதுவரையில் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரஷ்ய படைகள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் அறிவித்துள்ளது.
ஒவ்வொரு நாளும், உக்ரேனிய ஆயுதப் படைகள் உக்ரைனுடனான போரில் உயிரிழந்த ரஷ்ய துருப்புக்களின் எண்ணிக்கையின் மதிப்பீட்டைப் பகிர்ந்து கொள்கின்றன.
இதன்படி, பெப்ரவரி 24 முதல் குறைந்தது 35,750 பேர் கொல்லப்பட்டதாக இப்போது உக்ரைன் அறிவித்துள்ளது. இதில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 150 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரேனிய மதிப்பீடுகள் ரஷ்யா மற்றும் மேற்கத்திய முகவரங்கள் வெளியிடப்பட்டதை விட தொடர்ந்து அதிகமாக இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
குழந்தை உட்பட குறைந்தது 21 பேர் பலி
இதனிடையே, உக்ரைனின் தெற்கு ஒடேசா பகுதியில் ஒரே இரவில் ரஷ்ய ஏவுகணைத் தாக்குதல்களில் ஒரு குழந்தை உட்பட குறைந்தது 21 பேர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Serhiyivka கிராமத்தில் நடந்த ஏவுகணை தாக்குதலில் ஒன்பது மாடி கட்டிடத்தில் 16 பேர் கொல்லப்பட்டதாக மாநில அவசர சேவை தெரிவித்துள்ளது. கிராமத்தில் உள்ள விடுமுறை விடுதியில் நடந்த தனித்தனி தாக்குதலில் குழந்தை உட்பட மேலும் ஐந்து பேர் கொல்லப்பட்டனர்.
கடந்த சில நாட்களில் உக்ரைன் நகரங்கள் மீது ரஷ்யா டஜன் கணக்கான ஏவுகணைகளை வீசியுள்ளது. வெள்ளிக்கிழமை கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் ரஷ்யா குடிமக்களின் இலக்குகளைத் தாக்குகிறது என்ற குற்றச்சாட்டை மறுத்தார்.
ரஷ்யாவின் இந்த செயலை பயங்கரவாதச் செயல் என்று உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி குற்றம் சுமத்தியுள்ளார். "இது இலக்கு வைக்கப்பட்ட ஏவுகணைத் தாக்குதல், ரஷ்யா செய்த பயங்கரவாத செயல் என அவர் குறிப்பிட்டுள்ளார்.