கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு 34 புதிய திட்டங்கள்!
அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளன.
இந்த திட்டங்களில் பலவற்றின் பணிகள் இந்த ஏப்ரல் மாத இறுதிக்குள் ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆலோசனை
இது தொடர்பான ஆலோசனைகளை வழங்குவதற்கான ஒரு நாள் செயலமர்வு ஒன்று நேற்று (10) அலரி மாளிகையில் உள்ள லோட்டஸ் கட்டடத்தில் அமைந்துள்ள கிளீன் ஸ்ரீலங்கா செயலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் நடைபெற்றுள்ளது.
இதன்போது, செயற்படுத்தப்படவுள்ள முன்மொழிவுகளை தேசிய திட்டமிடல் திணைக்களத்தின் அனுமதிக்காக சமர்ப்பிப்பதற்காக, அந்த திணைக்களத்தின் மாதிரிக்கு அமைவாக முன்மொழிவுகளை தயாரிப்பது தொடர்பில் தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.
தேசிய திட்டமிடல்
சம்பந்தப்பட்ட திட்டங்களை செயல்படுத்துவதற்கு தேசிய திட்டமிடல் திணைக்களத்தின் அனுமதியைப் பெற்ற பின்னர், உரிய வகையில் ஒரு செயல் திட்டத்தைத் தயாரிப்பது தொடர்பாகவும் அதற்கமைய துரிதமாக ஆரம்பிக்க வேண்டிய திட்டங்களை இம்மாத இறுதிக்குள் ஆரம்பிப்பது குறித்தும் இதன் போது ஆராயப்பட்டுள்ளது.
கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் அரசாங்கம் எதிர்பார்க்கும் நோக்கங்கள் குறித்து ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க இங்கு தெளிவுபடுத்தியுள்ளார்.
மேலும், நாட்டில் சமூக, சுற்றுச்சூழல் மற்றும் நெறிமுறை விழிப்புணர்வை உருவாக்கி சமூகத்தை உயர்ந்த நிலைக்கு உயர்த்தும் நோக்கில், அனைத்து தரப்பினரின் பங்களிப்புடன் நாடளாவிய ரீதியாக செயல்படுத்தப்படவுள்ள “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்திற்கு இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் 5 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |