மன்னாரில் 34 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு புதிய நியமனங்கள்
மன்னார் பிரதேச செயலகத்தில் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக (EDO) கடமை ஆற்றிய 34 பேருக்கு நேற்றைய தினம் (11.2.2026) "சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர்' (CO) நியமனம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டலுவல்கள் அமைச்சின் கீழ் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக (DO) கடமையாற்றி வந்த 34 பேர், கிராமிய அபிவிருத்தி சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சிற்கு மாற்றப்பட்டு சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர்களாக (CO) நியமிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த நியமன கடிதங்களை வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் ம. ஜெகதீஸ்வரன் மன்னார் பிரதேச செயலகத்தில் வைத்து உத்தியோகபூர்வமாக வழங்கி வைத்தார்.
அரசாங்கம்
இந்தநிகழ்வில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர், நடுத்தர வர்க்கத்தில் உள்ள அரச ஊழியர்கள் மற்றும் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள மக்கள் மீது எமது அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.

இவ்வாறான மக்களைப் பொருளாதார ரீதியாக முன்னேற்றக் கூடிய திட்டங்களை நாங்கள் வகுத்திருக்கிறோம். இனிவரும் காலங்களில் அதற்குரிய பலன்களை நீங்கள் அனுபவிப்பீர்கள்.
எனவே உங்களுக்கு வழங்கப்பட்ட பணிகளில் நீங்கள் சிறப்பாக செயல்பட வேண்டும்.
அபிவிருத்தி திட்டங்கள்
அதிலே ஏதேனும் இடர்பாடுகள் ஏற்பட்டால் நீங்கள் பிரதேச செயலாளர் அல்லது பிரஜா சக்தி தலைவர்கள் ஊடாக அதை தீர்த்துக்கொள்ள வேண்டும்.

எல்லாருக்குமே இது ஒரு புதிய பணி எந்த ஒரு விடயத்தையும் தனியாக முடிவெடுக்கும் போது தான் பிரச்சனைகள் உருவாக்குகின்றது.
எனவே நீங்கள் குழுவாக சேர்ந்து செயல்பட வேண்டும். கடந்த அரசாங்கங்களின் காலங்களிலே வழங்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு ஒரு தொகுதியாக தான் சென்று சேர்ந்திருக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.



