48 மணி நேரத்தில் 33 பேர் பலி! - பொலிஸார் வெளியிட்ட அறிவிப்பு
கடந்த 9 நாட்களில் நாடு முழுவதும் பதிவான வீதி விபத்துக்களில் மொத்தம் 86 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு நாட்களில் மட்டும் வீதி விபத்துகளில் 33 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி வீதி விபத்துகளில் 18 பேரும், 2ம் தேதி 15 பேரும் வீதி விபத்துகளில் உயிரிழந்துள்ளனர்.
பலியானவர்களில் பெரும்பாலானோர் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மற்றும் முச்சக்கர வண்டி சாரதிகள் என்பதுடன், ஞாயிற்றுக்கிழமை (2) இடம்பெற்ற விபத்துக்களில் மூன்று பாதசாரிகளும் உயிரிழந்துள்ளனர்.
டிசம்பர் 25 முதல் டிசம்பர் 31 வரையிலான ஒரு வாரத்திற்குள் 52 விபத்துகளில் 53 பேர் உயிரிழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கோவிட் தொற்று காரணமாக கடந்த ஆண்டு நாட்டில் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த போதிலும், 2021 இல் வீதி விபத்துக்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பேச்சாளர் கூறினார்.
அதன்படி, 2021 ஆம் ஆண்டில் மொத்தம் 2,365 விபத்துக்கள் பதிவாகியுள்ளன, அதில் 2,461 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், கடந்த ஆண்டு சாலை விபத்துகளில் 5,383 பேர் படுகாயமடைந்துள்ளனர்.