போரதீவுப்பற்று பிரதேசத்தில் கடந்த இரண்டு தினங்களில் 32 கோவிட் தொற்றாளர்கள்
மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களில் 32 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொதுச்சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 123 கோவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில், தொடர்ச்சியான அன்டிஜன் மற்றும் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இதன்கீழ் நேற்று முன்தினம் போரதீவுப்பற்று பகுதியில் 13பேர் கோவிட் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ள நிலையில், நேற்று 19பேர் கோவிட் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.
கோவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்களில் பெரும்பாலானோர் ஆரையம்பதி ஆடைத்தொழிற்சாலையில் கடமையாற்றுபவர்களும், அவர்களின் உறவினர்களும் எனப் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளார்.
இதேநேரம் கடந்த 14நாட்களில் மட்டக்களப்பு ஆரையம்பதியில் உள்ள
ஆடைத்தொழிற்சாலையில் கடமையாற்றும் 157பேர் கோவிட் தொற்றுக்கு
இலக்காகியுள்ளதுடன், குறித்த ஆடைத்தொழிற்சாலை எதிர்வரும் 06ஆம் திகதி வரையில்
மூடப்படுவதாகவும் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்
வைத்தியர் நா.மயூரன் தெரிவித்துள்ளார்.



