மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 31 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு
மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவின் மயிலந்தனை கிராமத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 31 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வு நேற்று (09.08.2023) இடம்பெற்றுள்ளது.
உயிர் நீத்தவர்களின் நினைவாக ஆலயத்தில் விசேட பூஜைகள் இடம்பெற்று, பொதுச் சுடரேற்றி மலர் அஞ்சலி செலுத்தியதுடன் உணர்வு பூர்வமாக நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
நீதி கோரி மகஜர்
இதன்போது படுகொலை செய்யப்பட்டவர்களின் குடும்ப உறவுகளுக்கு நீதி கோரி, ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 09.08.1992 ஆம் ஆண்டு, புனானை மயிலந்தனை கிராமத்தைச் சேர்ந்த சிறுவர்கள்,பெண்கள் உட்பட 39 பேர் வெட்டியும் சுடப்பட்டும் படுகொலை செய்யப்பட்டதுடன் 34 பேர் காயங்களுக்கு உள்ளாக்கப்பட்டனர்.
இவர்களுக்கான நீதி 31 வருடங்கள் கழிந்தும் இதுவரை கிடைக்கவில்லை என்பதனை எண்ணி மக்கள் கவலையடைகின்றனர்.
நேரில் கண்ட சாட்சியங்களின் அடிப்படையில் புணானை இராணுவத்தினரே இப்படுகொலையை நிகழ்த்தியதாக தெரிவித்து வழக்கு தொடுக்கப்பட்டது.
அப்போது இடம்பெற்ற அடையாள அணிவகுப்பில் 24 இராணுவத்தினர் அடையாளம் காட்டப்பட்டனர்.வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட எந்த ஒரு இராணுவத்தினரும் குற்றம் இழைக்கவில்லை என ஜீரி குழு ஏகமனதாக தீர்ப்பளித்தது.
மேன் முறையீடு செய்வதற்கு அப்போதிருந்த சட்டமா அதிபர் ஒப்புதல் அளிக்கவில்லை. எனவே 2002 நவம்பர் 27 இல் குற்றம் சாட்டப்பட்ட இராணுவத்தினர் விடுதலை செய்யப்பட்டனர்.
எனவே மீளவும் நீதிக்காக ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுப்பதாக பாதிக்கப்பட்டோர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.








படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan
