திறமை இருந்தும் வலியும் கண்ணீரும் மட்டுமே பரிசு!...துரதிஷ்டத்தால் 31 வருடமாக பலிக்காத கனவு
கிரிக்கெட் உலகின் மிகவும் பலம் பொருந்திய அணிகளில் ஒன்றான தென்னாபிரிக்க அணி இதுவரை ஒருமுறை கூட உலகக்கிண்ண இறுதிப்போட்டியை எட்டாமல் இருப்பது கிரிக்கெட் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
டீ காக், மில்லர் போன்ற உலகத்தர துடுப்பாட்ட வீரர்களுடனும் ரபாடா, மஹராஜ் போன்ற தரமான பந்து வீச்சாளர்களுடனும் களமிறங்கிய தென்னாபிரிக்க அணி இம்முறையும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறாமல் தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.
நேற்றைய தினம்(17) நடைபெற்ற அவுஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
அவுஸ்திரேலியா வெற்றி
ஆட்டத்தில் மழை குறுக்கிட்டதால் சிறிது நேரத்தின் பின் தொடங்கிய ஆட்டத்தில் ஆரம்பம் முதலே தென்னாபிரிக்க துடுப்பாட்ட வீரர்கள் குறைந்த ஓட்டங்களுக்கு சரிய ஆரம்பித்தனர்.
இறுதிவரை போராடிய மில்லர், சதமடித்து 212 என்ற ஓட்ட எண்ணிக்கைக்கு தென்னாபிரிக்காவை அழைத்துச்சென்றார்.
பந்துவீச்சில் தென்னாபிரிக்க அணி போராடினாலும் அவுஸ்திரேலிய அணி 47.2 ஓவர்களில் இலக்கை அடைந்து வெற்றி பெற்றதோடு இறுதிப்போட்டிக்குள்ளும் நுழைந்தது.
இதனை தொடர்ந்து ஐந்தாவது முறையாக அரையிறுதி வரை முன்னேறி, இறுதிப்போட்டிக்கு தகுதி பெறாமல் தென்னாபிரிக்க அணி வெளியேறியது.
சர்ச்சைக்குரிய முடிவு
தென்னாபிரிக்க அணி முதன்முதலாக கலந்து கொண்ட 1992ஆம் ஆண்டு உலகக்கோப்பையிலேயே அரையிறுதிக்கு முன்னேறியது.
1992ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22ஆம் திகதி நடைபெற்ற அரையிறுதியில், இங்கிலாந்தை எதிர்கொண்ட தென்னாபிரிக்க அணிக்கு 13 பந்துகளில் 22 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் மழை குறுக்கிட்டது.
மழை ஓய்ந்த பிறகு அப்போது இருந்த மழை தொடர்பான சட்டதிட்டத்தின் அடிப்படையில், தென்னாபிரிக்க அணிக்கு ஒரு பந்தில் 22 ஓட்டங்கள் என்ற நியாயமற்ற இலக்கு விதிக்கப்பட்டது.
அப்போட்டியில் தென்னாபிரிக்க அணி தோல்வியை தழுவ, கிரிக்கெட் உலகில் இன்று வரை இது ஒரு நியாயமற்ற மற்றும் சர்ச்சைக்குரிய முடிவாக ரசிகர்களால் கருதப்படுகிறது.
சமநிலையில் முடிந்த ஆட்டம்
இதனையடுத்து 1999ஆம் ஆண்டு நடைபெற்ற அவுஸ்திரேலியாவுக்கெதிரான அரையிறுதியில், 214 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா 213 ஓட்டங்களை எடுக்க போட்டி சமநிலையில் முடிந்தது.
புள்ளிப்பட்டியலின் படி தென்னாபிரிக்காவை விட உயர்வாக இருந்ததால் அவுஸ்திரேலியா அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
மீண்டுமொரு முறை தென்னாபிரிக்கா துரதிஷ்டத்தால், இறுதிப்போட்டியை அடைய முடியாமல் தொடரை விட்டு வெளியேறியது.
அதன்பின்னர், 2007ஆம் ஆண்டு உலகக்கிண்ண அரையிறுதியில் மீண்டும் அவுஸ்திரேலியாவை எதிர்கொண்ட தென்னாபிரிக்கா மிக மோசமான ஒரு தோல்வியை சந்தித்தது.
கண்ணீர் வடித்த வீரர்கள்
தொடர்ந்து 2015ஆம் ஆண்டு உலகக்கிண்ண அரையிறுதிப் போட்டியில் தென்னாபிரிக்க அணி நியூசிலாந்து அணியை எதிர்கொண்டது.
போட்டியில் மழை குறுக்கிட்டதால் 43 ஓவர்களில் 298 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து, கடைசி 2 பந்துகளில் 5 ஓட்டங்கள் தேவை என்ற ஒரு பரபரப்பான நிலையில் இருந்தது.
தொடர்ந்து ஸ்டெய்ன் வீசிய 43ஆவது ஓவரின் ஐந்தாவது பந்தை எலியட் ஆறு ஓட்டங்களாக மாற்ற, தென்னாபிரிக்க அணி தொடரிலிருந்து விடைபெற்றது.
டூ பிளெஸ்ஸிஸ், டிவில்லியர்ஸ், மோர்கெல் போன்ற வீரர்கள் தோல்வியுற்று மைதானத்தின் நடுவில் கண்ணீர் வடித்த காட்சியை இன்றுவரை கிரிக்கெட் ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள்.
கனவு நிறைவேறும்
இம்முறை நடைபெற்ற உலககிண்ணத்திலும் தென்னாபிரிக்க அணி இறுதிப்போட்டியை ஒரு எட்டாக்கனியாக பார்த்தவாறே வெளியேறியிருக்கின்றது.
உலகக் கிண்ணங்களில் தென்னாபிரிக்க அணி அரையிறுதிக்கு முன்னேறும் போதெல்லாம் அதனுடன் இணைந்து துரதிஷ்டமும் முன்னேறிவிடுகிறது.
ஜொன்டி ரோட்ஸ், கிப்ஸ், கல்லிஸ், நிட்னி, டூ பிளெஸ்ஸிஸ் மற்றும் டிவில்லியர்ஸ் போன்ற உலகத்தர வீரர்களை உலகுக்கு அளித்த தென்னாபிரிக்க அணியின் 31 வருட உலகக்கிண்ண கனவு என்றாவது ஒருநாள் நிறைவேறும் என்று தென்னாபிரிக்க வீரர்களை போல கிரிக்கெட் ரசிகர்களும் காத்திருக்கின்றார்கள்.
நியூசிலாந்து அணி
தென்னாபிரிக்கா மட்டுமன்றி நியூசிலாந்து அணியும் உலகக்கிண்ணங்களில் துரதிஷ்டம் வாய்ந்த ஒரு அணியாக உள்ளது.
நியூசிலாந்து அணி, உலககோப்பைகளில் 9 தடவைகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளதுடன் அதில் 2 தடவைகள் இறுதிப்போட்டியிலும் அடியெடுத்து வைத்தது.
நியூசிலாந்து, 2007 மற்றும் 2011 உலகக்கோப்பைகளில் அரையிறுதியில் இலங்கையிடம் தோற்று வெளியேறியதுடன், 2015 மற்றும் 2019 உலகக்கோப்பைகளில் இறுதிப்போட்டி வரை முன்னேறி, முறையே அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தினால் தோற்கடிக்கப்பட்டு உலகக்கோப்பை கனவை பறிகொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |