சர்வதேச கடலில் தத்தளித்த 303 இலங்கையர்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அவரச கோரிக்கை (video)
அண்மையில் சிங்கப்பூருக்கு அருகில் சர்வதேச கடற்பரப்பில் பயணிகளுடன் தத்தளித்த படகில் இருந்து பயணிகள் பலர் மீட்கப்பட்டிருந்தனர்.
குறித்த படகிலிருந்து மீட்கப்பட்ட 303 இலங்கையர்களில் 76 பேர் யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
கனடாவிற்கு தஞ்சம் கோரிச் சென்ற 264 ஆண்கள், 19 பெண்கள் மற்றும் 20 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாத சூழ்நிலையிலேயே, தாம் கனடா நோக்கி அகதிகளாக செல்ல முயற்சித்ததாக மீட்கப்பட்ட இலங்கை அகதிகள் வியட்நாம் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.
குறித்த இலங்கை அகதிகள் மீண்டும் இலங்கைக்கு செல்ல மறுப்பு தெரிவித்து வருவதாகவும் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
இந்நிலையில், இந்த அகதிகள் விடயத்தில் இலங்கை அரசாங்கம் தலையிட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அகதிகளை ஐ.நா விடம் ஒப்படைக்குமாறும் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் கூறுகையில், "கடந்த சில நாட்களுக்கு முன்னர் வியட்நாம் கடற்பரப்பில் 303 இலங்கையர்கள் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த நிலையில் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
அவர்கள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட விடயங்களால் அவர்கள் இங்கிருந்து சென்றுள்ளனர்.
மனிதாபிமான அடிப்படையில் அவர்களை ஐ.நாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கின்றேன்.
264 ஆண்களும், 19 பெண்களும், 20 சிறுவர்களும் அடங்கலாக 303 பேர் அங்குள்ளனர்.
ஜனாதிபதி நினைத்தால் அவர்களை ஐ.நாவிடம் பாரப்படுத்த முடியும். இதனை மிகவும்
விநயமாக அவரைக் கேட்கின்றேன்" - என்றார்.




