தனியார் நிறுவனமொன்றின் 300 கோடி மோசடியை மறைத்த முன்னாள் ஜனாதிபதிகள்
மாகம்புர துறைமுக முகாமைத்துவ தனியார் நிறுவனம் தரமற்ற எண்ணெயை கொள்வனவு செய்ததன் மூலம் ஏற்பட்ட 300 கோடிக்கு மேலான நட்டத்தை முன்னாள் ஜனாதிபதிகள் மூவர் மறைத்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மாகம்புர துறைமுக முகாமைத்துவ தனியார் நிறுவனம் இலங்கை துறைமுக அதிகாரசபையால் நிறுவப்பட்டதாகும்.
2014 ஆம் ஆண்டில் மாகம்புர துறைமுக முகாமைத்துவ தனியார் நிறுவனம் தரமற்ற எண்ணெயை கொள்வனவு செய்ததன் மூலம் துறைமுக அதிகாரசபைக்கு 24 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (ரூ. 300 கோடிக்கு மேல்) நட்டம் ஏற்பட்டுள்ளதாக பொது நிறுவனங்கள் குழுவில் (COPE) கண்டறியப்பட்டுள்ளது.
COPE குழு உறுதிப்படுத்தல்
இந்நிலையில், சம்பவம் நடந்து பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு அண்மைய காலத்தில், இந்தத் தரமற்ற எண்ணெயை கொள்வனவு செய்ததற்கு எதிராக துறைமுக அதிகாரசபை இலஞ்சம் - ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளதாக கோப் குழு உறுதிப்படுத்தியது.
அதன்படி, குறித்த முறைப்பாடு ஒகஸ்ட் 2024இல் செய்யப்பட்டுள்ளது. கொள்வனவு செய்யப்பட்ட எண்ணெய்க்கான பணம் துறைமுக அதிகாரசபை வழங்கிய உத்தரவாதத்திற்கு அமைய ஒரு தனியார் வங்கி வழங்கிய கடனின் மூலம் மாகம்புர துறைமுக முகாமைத்துவ தனியார் நிறுவனம் செலுத்தியுள்ளது.
வழங்கப்பட்ட தகவல்களின்படி, குறித்த நிறுவனம் அந்தக் கடனில் 18.4 மில்லியன் அமெரிக்க டொலர்களை இன்னும் திருப்பிச் செலுத்தவில்லை. இது தொடர்பாக, சம்பந்தப்பட்ட வங்கி கடந்த 2019ஆம் ஆண்டு மாகம்புர துறைமுக முகாமைத்துவ நிறுவனம் மற்றும் இலங்கை துறைமுக அதிகாரசபைக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளதாக கோப் குழுவின் தலைவர் நிஷாந்த சமரவீர தெரிவித்தார்.
18.4 மில்லியன் அமெரிக்க டொலர்
மாகம்புர துறைமுக மேலாண்மை நிறுவனம் வாங்கிய கடனை செலுத்தாத நிலையில், ஜூன் 1, 2022 அன்று நிறுவனத்தை கலைக்க ஒரு கலைப்பாளர் நியமிக்கப்பட்டதும் கோப் குழுவில் தெரியவந்தது.
கோப் குழுவில் வழங்கப்பட்ட தகவல்களின்படி, இந்த நிறுவனம் ஹம்பாந்தோட்டை துறைமுக முகாமைத்துவ நடவடிக்கைகளை மேற்கொள்ள ஜூலை 5, 2013 அன்று நிறுவப்பட்டது.
மேலும், இந்த நிறுவனம் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திடமிருந்து பெறப்பட்ட அனுமதிப்பத்திரத்தின் மூலம் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு எரிபொருள் விநியோகிக்கும் நடவடிக்கைகளை செய்துள்ளது.
இந்த தரம் குறைந்த எண்ணெய் கொள்முதல்கள் அந்த அனுமதிப்பத்திரத்தைப் பயன்படுத்தி செய்யப்பட்டதாகும். குறித்த எரிபொருள் மோசடி தொடர்பில் மூன்று முன்னாள் ஜனாதிபதிளும் மறைத்துள்ளதாகவே கூறப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




