30 ஆண்டுகாலப் பிரச்சினை.. அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பு
எதிர்வரும் 2026 நவம்பர் 9ஆம் திகதி நாடு தழுவிய ரீதியில் ஒருநாள் சுகவீன விடுப்புப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக மத்திய மற்றும் மாகாண அரச சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் தொழிற்சங்கக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் 30 வருடகாலமாகத் தீர்க்கப்படாத தொழில்சார் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி, இந்நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இது குறித்து யாழ். ஊடக அமையத்தில் நேற்று (3) ஊடக சந்திப்பை முன்னெடுத்து குறித்த சங்கத்தின் பிரதிநிதிகள் இவ்வாறு தெரிவித்தனர்.
எடுத்துள்ள தீர்மானம்
மேலும் அவர்கள், "அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவைப் பிரமாணக் குறிப்பை நடைமுறைப்படுத்துவதன் ஊடாகவே தமது நீண்டகாலத் தொழில்சார் பிரச்சினைகளுக்கு அடிப்படைத் தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியும்.

குறிப்பாக, நியாயமான பதவி உயர்வுகள், சம்பள ஏற்றங்கள் உள்ளிட்ட தொழில்சார் உரிமைகளை உறுதிப்படுத்தும் நோக்கில், அரசின் பல்வேறு மட்டங்களிலுள்ள பொறுப்புவாய்ந்த தரப்பினரிடம் பல தடவைகள் உரிய ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களுடன் கோரிக்கைகள் எமது தரப்பால் முன்வைக்கப்பட்டது.
அத்துடன் இதுதொடர்பாக கவனயீர்ப்புப் போராட்டங்களும் எம்மால் முன்னெடுக்கப்பட்டன. எனினும், இதுவரையில் எமது குறித்த பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்காத நிலையில், கடந்த 2026 ஒக்டோபர் 11ஆம் திகதி மத்திய மற்றும் மாகாண அரச சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் தொழிற்சங்கக் கூட்டமைப்பு மேற்கொண்ட தீர்மானத்துக்கு அமைய நவம்பர் 9ஆம் திகதி ஒருநாள் சுகவீன விடுப்புப் போராட்டத்தை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளோம்” என குறிப்பிட்டுள்ளனர்.