காத்தான்குடியில் பொலிஸார் குவிப்பு! வெள்ளிக்கிழமை நடந்த அதிரடிக் கைதுகள்
மட்டக்களப்பு - காத்தான்குடி பகுதியில் அதிகாலை நடைபெற்ற சுற்றிவளைப்பில் சுமார் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சஹரானின் அடிப்படைவாதத்தை மீள் உருவாக்கம் முயற்சிகளில் ஈடுபட்டார்களா? என்ற சந்தேகத்தின் பேரில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதேவேளை இவர்கள் கைது செய்யப்பட்ட இடங்களில் பொலிஸார் விசேட தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களில் சஹரானுடன் இணைந்து அடிபடைவாத செயற்பாடுகளில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் கைதான சிலரும் உள்ளடங்கியுள்ளனர்.
எனினும் காத்தான்குடி பகுதியில் உள்ள வர்த்தகர்கள், சமூகத்தில் அந்தஸ்து மிக்க பதவிகளில் உள்ளவர்கள் அப்பாவி இளைஞர்கள் என பலரும் இவர்களுள் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நடந்தது என்ன
காத்தான்குடி பகுதியில் நடைபெற்ற மேற்படி திடீர் கைது குறித்து அந்த பகுதியில் உள்ள சிலர் கருத்து தெரிவிக்கும் போது,
" காத்தான்குடி பகுதியில் 304 என்ற கடதாசி கூட்ட விளையாட்டு நடைபெறுவது வழக்கம். கிரிக்கெட், உதைப்பந்தாட்டம் போல் இந்த 304 என்ற கடதாசி கூட்டம் காத்தான்குடியில் மூன்று இடங்களில் விளையாடுவார்கள்.
இந்த விளையாட்டில் காத்தான்குடியில் உள்ள செல்வந்தர்கள் உற்பட பலரும் கலந்து கொண்டு வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுவது வழமை.
அதேபோல் இன்றைய தினமும் 304 கடதாசி கூட்டம் விளையாடிக் கொண்டிருந்த போது தீடிரென சுற்றிவலைத்த பொலிஸார் இவர்களை கைது செய்து கொண்டு சென்றுள்ளனர்.
இன்று (01)அதிகாலை 1.30 மணியளவில் இந்த கைது இடம்பெற்றது. கைது செய்யப்பட்டவர்களை காலையில் விடுதலை செய்வதாக கூறினர்.
ஆனால் தற்போது அவர்களை சஹரானின் அடிப்படை வாதத்தை மீள் உருவாக்க முயற்சி செய்தார்கள் என்ற கூறப்பட்டு அவர்களை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் சிலர் சஹரானின் அடிப்படைவாதக் செயற்பாடுகளில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டவர்கள்தான்.
மனித உரிமை மீறல்
ஆனால் அவர்கள் இருந்ததற்காக ஒட்டுமொத்தமாக எல்லோரையும் தீவிரவாத செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர் என கூறி கைது செய்வது மனித உரிமை மீறலாகும்.
சஹரானின் மனைவியையே நீதிமன்றம் குற்றம் அற்றவர் என்று விடுதலை செய்துள்ள நிலையில் 304 விளையாடியவர்களை அடிப்படைவாதத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் என கூறி கைது செய்வது எந்த வகையில் நியாயமானது.
அதுவும் காத்தான்குடியில் மிகவும் அந்தஸ்து மிக்க பதவிகளில் உள்ளவர்கள், வர்த்தகர்கள், முக்கிய சங்கங்களில் உள்ளவர்கள் என பலரும் இதில் கைது செய்யப்பட்டுள்ளனர்." என்றனர்.
மேலதிக தகவல் - நிலாந்தன் மட்டக்களப்பு
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |