கிண்ணியா கடற்கரைப் பொழுதுபோக்கு பூங்காவிற்கு 30 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு
கிண்ணியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட, திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியில், கடற்கரைப் பொழுதுபோக்கு பூங்காவில், கழிவறை கூடங்களை நிர்மாணிப்பதற்கான இடத்தினை அடையாளம் காண்பதற்கான நடவடிக்கை இன்று(12) மேற்கொள்ளப்பட்டது.
சுற்றுலா பயணிகள் அதிகமாக விரும்பி வருகின்ற ஓர் இடமாக இருந்தாலும், நீண்ட காலமாக, அடிப்படை வசதிகள் இன்றி, கவனிப்பாரற்ற நிலையிலே இந்தப் பொழுது போக்கு பூங்கா காணப்பட்டு வந்தது.
நவீன வடிவில் மாற்றி அமைக்க
இந்தநிலையில், கிண்ணியா நகர சபை தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் எம். ஈ. எம்.ராபியின் வேண்டுகோளுகினங்க, இந்தப் பகுதியின் கழிவறை கூடங்களுக்கு 30 மில்லியன் ரூபா நிதியினை சுற்றுலாத்துறை அமைச்சு ஒதுக்கீடு செய்துள்ளது.
இன்றைய நிகழ்வில், திருகோணமலை மாவட்ட தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ரொசான் அக்மீமன, கிண்ணியா நகர சபை உறுப்பினர்கள், கிண்ணியா பிரதேச செயலாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது, தற்போது இந்த கடற்கரை பூங்காவுக்கு உடனடி தேவையாக இருக்கின்ற கழிவறை கூடங்களை அமைப்பதற்கு 30 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும், எதிர்காலத்தில், நிலாவெளி, பளிங்கு கடற்கரை ஆகியவற்றோடு, கிண்ணியா கடற்கரை பூங்காவையும் உல்லாச பயணிகளை மேலும் கவரும் வண்ணம், நவீன வடிவில் மாற்றி அமைக்க, திட்டங்கள் வகுக்கப்பட்டிருக்கின்றன என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரொசான் அக்மீமன தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






