இலங்கை மற்றும் தாய்லாந்து கடவுச்சீட்டு வைத்திருப்போருக்கான விசா விலக்கு குறித்து வெளியான அறிவிப்பு
இலங்கை மற்றும் தாய்லாந்து கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கான விசா விலக்கு தொடர்பான ஒப்பந்த வரைபுக்கு தாய்லாந்து அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக தாய்லாந்து அரசாங்கத்தின் பிரதி பேச்சாளர் புளொய்தலே லக்சமீசெங்ஜான் தெரிவித்துள்ளார்.
இந்த ஒப்புதலானது நேற்றைய தினம் (17.11.2026) வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இதன்படி, குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு தாய்லாந்தின் வெளிவிவகார அமைச்சருக்கு அல்லது அவரால் நியமிக்கப்படும் பிரதிநிதிக்கு அமைச்சரவை அதிகாரம் வழங்கியுள்ளது.
விசா இன்றி தங்கியிருக்கக்கூடிய நாட்கள்
இந்த ஒப்பந்த வரைபின்படி, இரு நாடுகளினதும் சாதாரண கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் விசா இன்றி ஒரு பயணத்தில் அதிகபட்சம் 30 நாட்கள் வரை மற்றைய நாட்டில் தங்கியிருக்க முடியும்.
எனினும், 180 நாட்கள் கொண்ட காலப்பகுதியில் மொத்தமாக 90 நாட்களுக்கு மேல் தங்கியிருக்க முடியாது என குறிப்பிடப்பட்டுள்ளது.
30 நாட்களுக்கு மேல் தங்கியிருத்தல், தொழில் புரிதல், கல்வி கற்றல் அல்லது முன் அனுமதி தேவைப்படும் நடவடிக்கைகளில் ஈடுபடுதல் போன்றவற்றுக்கு உரிய விசாவைப் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒப்பந்தத்தை இடைநிறுத்தும் அதிகாரம்
மேலும், பொதுமக்களின் அமைதி, சுகாதாரம் அல்லது தேசிய பாதுகாப்பு தொடர்பான காரணங்களின் அடிப்படையில், இரு நாடுகளுக்கும் இந்த ஒப்பந்தத்தை முழுமையாகவோ அல்லது பகுதியளவிலோ இடைநிறுத்துவதற்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இரு நாடுகளும் தத்தமது உள்நாட்டு நடைமுறைகளை நிறைவு செய்தமை தொடர்பான இறுதி எழுத்துமூல அறிவித்தல் கிடைத்த 60ஆவது நாளில் இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையிலான சுற்றுலாப் பயணங்களை இலகுபடுத்துவதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான பௌத்த மற்றும் கலாசார உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.