மீண்டும் கலவர பூமியாகும் மணிப்பூர்: பழங்குடியினத்தவர்கள் சுட்டுப் படுகொலை
இந்தியா - மணிப்பூர் இடம்பெற்ற கலவரத்தில் பழங்குடியினத்தை சேர்ந்த 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதால் அங்கு மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று (12.09.2023) அதிகாலை 3 மணியளவில் கங்போப்கி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட ஆயுதக் குழுவினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குகி ஸோ இனத்தைச் சேர்ந்த மூவர் கொல்லப்பட்டுள்ளனர்.
வாகனங்களில் வந்திறங்கிய ஆயுத கும்பலை சேர்ந்தவர்கள் கிராம மக்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தியதாக பிரதேசவாசிகள் கூறுகின்றனர்.
பதற்றம் அதிகரிப்பு
கடந்த மே மாதம் தொடங்கிய வன்முறை தற்போது வரை ஓயவில்லை.
வன்முறையைக் கட்டுப்படுத்த மாநில அரசு இராணுவம் மற்றும் அஸ்ஸாம் ரைஃபில் படையினரை வரவழைத்த நிலையிலும் வன்முறை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த நான்கு மாதங்களாக மணிப்பூரில் இரண்டு பழங்குடியினத்தவர்களுக்கு இடையில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் கலவரம் இன்னும் நீடித்த வண்ணம் உள்ளது.
இந்த கலவரத்தின் காரணமாக இதுவரையில் 180 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகள், வாழ்வாதாரம் என்பவற்றை இழந்து சொந்த நிலத்திலேயே அகதிகளைப் போன்று நிவாரண முகாம்களில் தஞ்சம் புகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
ஆனாலும் நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்து வருகிறது. ஒரு பிரிவினர் மற்றொரு பிரிவினரை தாக்குவது தொடர்கிறது.
கடந்த 8ம் திகதி டெங்னோபால் மாவட்டம் பாலல் என்ற இடத்தில் நடந்த வன்முறையில் 3 பேர் கொல்லப்பட்டனர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |