நாட்டில் இடம்பெற்ற பாரிய சைபர் தாக்குதல்: தொழில்நுட்ப அமைச்சர் எடுத்துள்ள நடவடிக்கை
அமைச்சரவை அலுவலகம் உள்ளிட்ட பல அரச நிறுவனங்கள் மீதான சைபர் தாக்குதல் தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனத்திடம் அறிக்கை கோரப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை சைபர் தாக்குதலை நடத்திய குழுவின் தகவல்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தரவுகள் அற்றுப்போகும் நிலை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், கடந்த மாதம் 26ஆம் திகதி இடம்பெற்ற சைபர் தாக்குதல் காரணமாக பல அரச நிறுவனங்களின் மின்னஞ்சல் பரிமாற்ற தரவுகள் தடைபட்டதாக இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் தெரிவித்திருந்தது.
இதற்கமைய gov.lk என்ற மின்னஞ்சலை பயன்படுத்தும் அனைத்து அரச அலுவலகங்களிலும் தரவுகள் அற்றுப்போகும் நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
gov.lk என்ற மின்னஞ்சலை பயன்படுத்தும் அரச நிறுவனங்களில் அமைச்சரவை அலுவலகம் உள்ளிட்ட இராஜாங்க அமைச்சுகள் பல உள்ளன. இந்த மின்னஞ்சல் ஊடாக மிகவும் முக்கிய அரச தகவல்கள் பரிமாறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
குறித்த தாக்குதல் ransomware என குறிப்பிட்டுள்ளதுடன், இதனால் சுமார் ஐயாயிரம் மின்னஞ்சல் முகவரிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ICTA நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |