தமிழக கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்பரப்பில் தஞ்சம்
இந்தியா தமிழ்நாடு தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து கடற்றொழிலுக்கு சென்ற மூன்று கடற்றொழிலாளர்கள் எரிபொருள் இன்றி காற்றின் வேகம் காரணமாக இலங்கை அனலைத்தீவு கடற்கரையில் தஞ்சமடைந்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
தஞ்சாவூர் மாவட்டம் கள்ளிவயல் தோட்டம் மீன்பிடி கிராமத்தில் இருந்து பைபர் படகில் புதுக்கோட்டை சேர்ந்த ராஜா (53) ராமநாதபுரத்தைச் சேர்ந்த குமார் (32) கள்ளிவயல் தோட்டத்தைச் சேர்ந்த முரளி (30) ஆகிய மூவர் கடற்றொழிலுக்கு கடலுக்கு சென்றுள்ளனர்.
கடற்பரப்பில் தஞ்சம்
கடற்றொழிலாளர்கள் நடுக்கடலில் கடற்றொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது அவர்களது படகிலிருந்து எரிபொருள் தீர்ந்ததன் காரணமாக படகு காற்றின் வேகம் காரணமாக இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டம் அனலைத்தீவு கடற்பரப்பில் கரை ஒதுங்கியுள்ளது.
இதனை கண்ட அந்த பகுதி கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்படை, யாழ்ப்பாணம் மீன்வளத்துறை மற்றும் அனலைத்தீவு பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
தகவல் அறிந்த அனலைத்தீவு பொலிஸார் மூவரையும் அனலைத்தீவு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக கடற்றொழிலாளர்கள்
விசாரணைக்கு பின்னர் தமிழக கடற்றொழிலாளர்கள் மூவரும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைக்கப்படுவார்கள் என யாழ்ப்பாணத்தில் இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எரிபொருள் இன்றி கடற்றொழிலாளர்கள் மூவரும் அனலைத்தீவு கடற்பரப்பில் தஞ்சமடைந்தது அனலைத்தீவு பொலிஸார் நடத்திய விசாரணையில் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதையடுத்து மூவரும் நீதிமன்றத்தின் ஊடாக சிறை தண்டனையின்றி படகுடன் விடுதலை செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக இந்திய துணை தூதரக அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.



