ராஜீவ் காந்தி கொலை வழக்கில் எஞ்சியுள்ள இலங்கையர்கள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலையில் தொடர்பு பட்டுள்ள மூன்று இலங்கையர்களை உடன் இலங்கைக்கு அனுப்ப தமிழ்நாடு மாநில அரசு நீதிமன்றததில் மனுத்தாக்கல் செய்துள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நான்கு இலங்கையர்கள் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு, மரண தண்டவை விதிக்கப்பட்டனர். பின்னர் சோனியா காந்தியின் சம்மதத்துடன் அவர்களுக்கான தண்டனை, பின்னர் ஆயுட்தண்டனையாக மாற்றப்பட்டது.
சட்டப் போராட்டங்கள்
இந்நிலையில் ஆயுள் தண்டனைக்காலம் முடிவுற்று சிறையில் இருந்து விடுதலையான பின்னர் நான்கு இலங்கைத் தமிழர்களையும் நாடுகடத்தப் போவதாக இந்திய மத்திய அரசாங்கம் அறிவித்திருந்தது எனினும் விடுவிக்கப்பட்ட கைதிகளான சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் மற்றும் முருகன் ஆகியோர் மத்திய அரசின் உத்தரவின் பேரில் தமிழ்நாடு சிறப்பு மறுவாழ்வு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
அதனை எதிர்த்து விடுவிக்கப்பட்ட கைதிகளும் அதற்கான சட்டப் போராட்டங்களை மேற்கொண்டிருந்தனர். தங்களை இலங்கைக்கு அனுப்புமாறு உண்ணாவிரதப் போராட்டங்களையும் மேற்கொண்டிருந்தனர்.
கோரிக்கை குறித்துப் பரிசீலனை
எனினும் மத்திய அரசின் பல்வேறு முட்டுக்கட்டைகள் காரணமாக சாந்தன் , தமிழ்நாட்டிலேயே நோய்வாய்ப்பட்டு உயிரிழந்த நிலையில் சடலம் மட்டுமே இலங்கைக்கு எடுத்து வரப்பட்டுள்ளது.
இந்நிலையில் எஞ்சியுள்ள மூன்று இலங்கைத் தமிழர்களான ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் மற்றும் முருகன் ஆகியோரை உடனடியாக நாட்டுக்கு அனுப்ப தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது.
தற்போதைக்கு இவர்கள் மூவரும் திருச்சி மறுவாழ்வு முகாமில் தமிழக அரசின் நிவாரண உதவிகளுடன் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
எனினும், குறித்த மூன்று பேரும் தனித்தனியாக மனுத் தாக்கல் செய்யும் பட்சத்தில் அவர்களின் கோரிக்கை குறித்துப் பரிசீலிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |