நாட்டில் வெவ்வேறு பகுதிகளில் ஏற்பட்ட விபத்துகளில் மூவர் பரிதாப உயிரிழப்பு
இலங்கையின் பல்வேறு பகுதிகளில் நேற்று ஏற்பட்ட கோர வீதி விபத்துகளில் சிக்கி மூவர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
ஹட்டன் - கொழும்பு வீதியின் கபுலுமுல்ல பகுதியில், கரவனெல்ல நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று எதிரே வந்த பேருந்துடன் நேருக்கு நேர் மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கரவண்டி சாரதியான எட்டியாந்தோட்டையைச் சேர்ந்த 59 வயதுடைய நபர் சிகிச்சை பலனின்றி கரவனெல்ல வைத்தியசாலையில் உயிரிழந்தார்.
பொலிஸார் நடவடிக்கை
விபத்தில் 14 வயது சிறுவன் ஒருவர் காயமடைந்துள்ள நிலையில், பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.

அதேநேரம், கொழும்பு - கண்டி பிரதான வீதியின் பல்லபான பகுதியில், வீதியோரம் நிறுத்தப்பட்டிருந்த லொறி ஒன்றின் பின்பக்கத்தில் முச்சக்கரவண்டி ஒன்று மோதியது.
ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால் ஏற்பட்ட இந்த விபத்தில், முச்சக்கரவண்டியின் பின்னால் அமர்ந்து பயணித்த ஹெம்மாதகம பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய நபர் கேகாலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
மேலும், பொரளை வார்ட் பிளேஸ் பகுதியில் வீதியைக் கடக்க முயன்ற பாதசாரி மீது கார் ஒன்று மோதியதில் விபத்து ஏற்பட்டது.
இதில் படுகாயமடைந்த ஹபரணை பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். காரின் ஓட்டுநர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.