சீனப் பிரஜை கடத்திக் கொலை: 3 சீனர்கள் நாட்டை விட்டு தப்பியோட்டம்!
கொழும்பு துறைமுக நகரில் சீனப் பிரஜை கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சீனர்கள் நாட்டை விட்டு தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொலை செய்யப்பட்ட சீனப் பிரஜை, கணினி மூலம் நிதி மோசடிகளில் ஈடுபட்டு சட்டவிரோதமாகப் பணம் சம்பாதித்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகக் கொழும்பு பிராந்தியத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஷாந்த டி சொய்சா தெரிவித்துள்ளார்.
கொழும்பு மற்றும் மேல் மாகாணத்தில் அண்மைய நாட்களில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்களின் உண்மைத் தன்மையை விளக்கும் வகையில் இன்று நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

கடந்த ஜூலை 23ஆம் திகதி அதிகாலை 3 மணியளவில் துறைமுக நகரப் பகுதியில் இரண்டு குழுக்களைச் சேர்ந்த சீனப் பிரஜைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலின் போது, ஒருவர் கடத்திச் செல்லப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.
கொல்லப்பட்ட சீனப் பிரஜையின் சடலம் எஹெலியகொட பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. சம்பவம் இடம்பெற்று சில மணித்தியாலங்களுக்குள் நாட்டிலிருந்து தப்பியோட முயன்ற இரு முக்கிய சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய 8 சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 3 சீனப் பிரஜைகள் ஏற்கனவே இலங்கையை விட்டுத் தப்பியோடியுள்ள நிலையில், அவர்களை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வரத் தேவையான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இக்கொலைச் சம்பவத்திற்குப் பயன்படுத்தப்பட்ட இரண்டு காற்றுத் துப்பாக்கிகள், கைத்தொலைபேசி ஒன்று, வாக்கி டாக்கி சாதனம் ஒன்று மற்றும் பல வாகனங்கள் அடையாளம் காணப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
இலங்கையிலுள்ள சீனத் தூதரகம் மற்றும் சீன அரசாங்கத்துடன் இணைந்து முழுமையான ஒருங்கிணைப்புடன் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகப் பிரதிப் பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்தார்.