எதிராளியை தாக்கிய சட்டத்தரணி உட்பட மூவருக்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு
அக்கரைப்பற்று மத்தியஸ்தர் சபையில் கடன் கொடுக்கல்-வாங்கல் சம்மந்தமான முறைப்பாடு தொடர்பான விசாரணை இடம்பெற்றுக் கொண்டிருந்தபோது எதிராளி மீது தாக்குதல் மேற்கொண்ட முறைப்பாட்டாளர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கைது நடவடிக்கை நேற்று (04.07.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த சட்டத்தரணி ஒருவரின் தந்தையார், நபர் ஒருவருக்கு 10 இலச்சம் ரூபாவை கடனாகக் கொடுத்த நிலையில், வாங்கிய கடனை அவர் திருப்பித் தரமறுப்பதாக அவருக்கு எதிராக அக்கரைப்பற்று மத்தியஸ்தர் சபையில் முறைப்பாடு செய்திருந்தார்.
கதிரையால் தாக்குதல்
இதனையடுத்து, முறைப்பாட்டாளரையும் எதிராளியையும் கடந்த ஞாயிற்றுக்கிழமை (02.07.2023) மத்தியஸ்தர் சபையில் வருமாறு அழைப்பான வழங்கப்பட்டு, இருசாராரும் அன்றைய தினம் மத்தியஸ்தர் சபையில் முன்னிலையாகிய நிலையில், கொடுக்கல்-வாங்கல் தொடர்பான விசாரணை இடம்பெற்றுக்கொண்டிருந்து.
இதன்போது எதிராளிக்கும் முறைப்பாட்டாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
பின்னர் எதிராளி மீது முறைப்பாட்டாளர் கதிரையால் தாக்குதல் நடாத்தியதையடுத்து, அவர் மீது அவரின் மகனான சட்டத்தரணி உட்பட 5 பேர் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இதில் அவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனையடுத்து தாக்குதலை மேற்கொண்டவர்கள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். இதனையடுத்து, அங்குப் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.
பிணையில் விடுவிப்பு
சம்பவ இடத்திற்கு பொலிஸாரை வரவழைத்து இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.
மேலும், தாக்குதலை மேற்கொண்டவர்கள் தலைமறைவாகி வந்த நிலையில், நேற்று (04.07.2023) சட்டத்தரணி அவரது தந்தையார் உட்பட 3 பேர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நிலையில் அவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதில் கைது செய்யப்பட்டவர்களை நேற்று மாலை அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் முற்படுத்தியபோது அவர்களைப் பதில் நீதவான் பிணையில் விடுவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |