முன்னாள் எம்.பி தங்கத்துரையின் 28ஆவது நினைவு தினம்
திருகோணமலை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் அருணாசலம் தங்கத்துரையின் 28ஆவது நினைவுதின அஞ்சலி நிகழ்வு நடைபெற்றுள்ளது.
இந்த நிகழ்வு நேற்று(5) மூதூர் -கிளிவெட்டியில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது அமரர் அ. தங்கத்துரையின் சொந்த ஊரான மூதூர் -கிளிவெட்டியிலுள்ள அவரது திரு உருவச் சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு, மலர்தூவி ஒரு நிமிட மௌன அஞ்சலி நிகழ்வு நடைபெற்றுள்ளது.
அஞ்சலி
இந்நிகழ்வில் இலங்கை தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாஸன், மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.பிரகலதன், மூதூர் பிரதேச சபையின் இலங்கை தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள்,அமரர் அ.தங்கத்துரையின் குடும்ப உறுப்பினர்கள், பிரதேச மக்கள்,பாடசாலை மாணவர்கள்,சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
மூதூர்- கிளிவெட்டிக் கிராமத்தில் 1936 ஆம் ஆண்டு பிறந்த அருணாசலம் தங்கத்தரை கிளிவெட்டி அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் புலமைப் பரிசு பெற்று 1947 இல் வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயம் சென்ற முதல் மாணவராவார். யாழ்ப்பாணம் அரியாலை ஸ்டான்லி கல்லூரியில் 1952 இல் இணைந்து உயர் கல்வியை முடித்தபின் இலங்கை நீர்ப்பாசனத் திணைக்களத்தில் எழுதுவினைஞராக 1955 இல் நியமனம் பெற்று இரத்தினபுரியில் இரண்டு வருடங்கள், பின் கொழும்பு ரத்மலானை தலைமைக் காரியாலயம், அதன்பின் 1965 இல் பிரதம லிகிதராக சோமபுர ஆகிய இடங்களிலும் பணியாற்றினார்.
அப்போது இலங்கை எழுதுவினைஞர் சங்க உறுப்பினராக இருந்ததோடு கிளிவெட்டி மற்றும் அண்டைய மூதூர் கிராமங்களின் முன்னேற்றத்திற்கான செயற்பாடுகளிலும் ஈடுபட்டார்.
1970 இலிருந்து 1977 வரை மூதூர் நாடாளுமன்ற உறுப்பினராக சேவையாற்றினார். அப்போது 34 வயது இளைஞரான அவர் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிப முன்னணி தலைவராகவும், அக்கட்சியின் மலையக தோட்டத் தொழிலாளர்களின் தொழிற்சங்கமான இலங்கை தொழிலாளர் கழகத்தின் தலைவராகவும் பதவி வகித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் பதவி நிறைவடைந்ததும் இலங்கை சட்டக் கல்லூரியில் சட்டம் பயில ஆரம்பித்து 1980 இல் சட்டத்தரணி ஆனார். 1994 இல் திருகோணமலை மாவட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் போட்டியிட்டு அம்மாவட்டத்தில் ஆகக் கூடுதலான விருப்பு வாக்குகளைப் பெற்று திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக இரண்டாவது தடவையாக தெரிவு செய்யப்பட்டார்.
படுகொலை
தமிழர் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்ற முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்த அதேவேளையில் மக்களின் அன்றாட அடிப்படைத் தேவைகளான உணவு, இருப்பிடம், கல்வி, வேலை வாய்ப்பு, கிராம நகர அபிவிருத்தி ஆகியவை தொடர்ந்து நடைபெற வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.
ஆசிரியர் பற்றாக்குறையை நிறைவு செய்வதற்காக புதிய நியமனங்கள் வழங்கப்பட உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டார். மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாகவிருந்த பாடசாலைகள் மகாவித்தியாலயங்களாக்கப்பட்டன. வெளிநாட்டுத் தூதரகங்கள், நலம்புரி அமைப்புக்கள் என்பவற்றின் அணுசரணைகளைப் பெற்று பல பாடசாலைகளின் தொடர்ச்சியான திட்டமிட்ட வளர்ச்சிக்கு வழிவகுத்துக் கொடுத்தார்.
1997 ஆம் ஆண்டு ஆடி மாதம் 5ஆம் நாள் மாலை திருகோணமலை நகரில் உள்ள ஸ்ரீ சண்முக வித்தியாலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட மூன்று மாடிக் கட்டிடத்தைத் திறந்து வைத்துவிட்டு வெளிவந்த சமயம் குண்டுத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார்.
அந்த துயரச் சம்பவத்தில் கல்லூரியின் அதிபர் ராஜேஸ்வரி தனபாலசிங்கம், நாமகள் வித்தியாலய அதிபர் திரு. ஜோசப், கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் உப அதிபர் திரு. சீவரத்தினம், பாடசாலை அபிவிருத்திச் சபை உறுப்பினர் கணேசலிங்கம், தொழில்நுட்பவியளாளர் இரட்னராஜா ஆகியோரும் படுகொலை செய்யப்பட்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |







செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 6 மணி நேரம் முன்

பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு... செயல்பாடுகளை நிறுத்தும் பெரும் தொழில்நுட்ப நிறுவனம் News Lankasri

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam
