இலங்கைக்கு கடத்தப்படவிருந்த கடல் அட்டைகளுடன்: ஒருவர் கைது
இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 இலட்சம் ரூபா மதிப்பிலான 250 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகளை மெரைன் பொலிஸார் பறிமுதல் செய்ததுடன், உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த கைது நடவடிக்கையானது நேற்று(16.02.2024) இடம்பெற்றுள்ளது.
சோதனை நடவடிக்கை
இராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி கடல் வழியாக இலங்கைக்கு சமீபகாலமாக கடல் அட்டை, கஞ்சா, ஏலக்காய், அழகு சாதன பொருட்கள்,பூச்சிக்கொல்லி மருந்து உள்ளிட்டவைகள் அதிக அளவு கடத்தப்பட்டு வருகிறன.
இந்நிலையில் நேற்று (16) காலை பனைக்குளம் அடுத்த ஆற்றங்கரை அம்மன் கோயில் பகுதியில் உள்ள ஒரு தோப்பில் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் பதப்படுத்தி வருவதாக மெரைன் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் ஆற்றங்கரை மெரைன் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் தாரிக் தலைமையிலான மெரைன் பொலிஸார் அப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர்.
இதன்போது அம்மன் கோயில் குடியிருப்பு பகுதியில் இருந்த தோப்பு ஒன்றில் தடை செய்யப்பட்ட சுமார் 250 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணை
இதையடுத்து கடல் அட்டைகளை பறிமுதல் செய்த மெரைன் பொலிஸார் அந்த தோப்பின் உரிமையாளரான ஜகாருதீன் என்பவரை கைது செய்து கடல் அட்டை கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட ஒரு இருசக்கர வாகனம் மற்றும் பதப்படுத்த பயன்படுத்தப்பட்ட தளவாட பொருட்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும் பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டை மற்றும் இருசக்கர வாகனம், கைது செய்யப்பட்ட நபர் உள்ளிட்ட அனைத்தையும் மேலதிக விசாரணைக்காக இராமநாதபுரம் வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |