வவுனியாவில் நடைபயிற்சிக்கு வந்த பெண்ணின் தங்க நகைகள் கொள்ளை
வவுனியா நகரசபை மைதானத்தில் நடைபயிற்சிக்கு வருகை தந்த பெண்ணொருவரின் நகைகளை திருடிய குற்றச்சாட்டில் இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் இன்று(16.02.2024) பம்பைமடுப் பகுதியைச் சேர்ந்த 32 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசாரணை
வவுனியா, தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் நடை பயிற்சிக்காக கடந்த சில நாட்களாக வவுனியா நகரசபை மைதானத்திற்கு வந்து சென்றுள்ளார். வழமை போன்று நேற்று (15) மாலையும் நகரசபைக்கு வருகை தந்துள்ளார்.
இதன்போது தான் அணிந்திருந்த சங்கிலி, காப்பு உள்ளிட்ட 4 பவுண் தங்க ஆபரணங்களை நகரசபை வளாகத்தில் உள்ள மோட்டார் சைக்கிள் தரிப்பிடத்தில் நிறுத்தப்பட்ட தனது மோட்டார் சைக்கிள் இருக்கைக்குள் வைத்து பூட்டி விட்டு நடைப் பயிற்சிக்கு சென்றுள்ளார்.
நடைபயிற்சி முடிந்த பின்னர் தனது மோட்டார் சைக்கிளை எடுப்பதற்காக குறித்த பெண்
வருகை தந்த போது அவரது மோட்டார் சைக்கிள் இருக்கை உடைக்கப்பட்டு அதில் இருந்த
நகைகள் களவாடப்பட்டிருந்தன.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண் வவுனியா தலைமை பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புபிரிவில் இரவு முறைப்பாடு செய்துள்ளார்.
இந்த முறைப்பாட்டையடுத்து தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜெயக் கொடியின் வழிகாட்டலில், குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஜயத்திலக தலைமையிலான பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையில், சந்தேகநபர் கொள்ளையடிக்கப்பட்ட ஆறு அரை இலட்சம் ரூபாய் பெறுமதியான 4 பவுண் நகைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது சந்தேகநபர் தப்பிச்செல்ல பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பொலிஸாரால் மீட்டுள்ளதுடன், சந்தேகநபரையும், மீட்கப்பட்ட பொருட்களையும் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |