22-வது அரசியலமைப்பு திருத்தத்தில் இருந்து பின்வாங்கப் போவதில்லை – அரசாங்கம்
22-வது அரசியலமைப்பு திருத்தத்தைக் கொண்டுவருவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கையிலிருந்து ஒரு அடி கூட பின்வாங்கப் போவதில்லை என நீதி அமைச்சர் ஹர்ஷன நாநாயக்கார தெரிவித்துள்ளார்.
பதுளையில் இன்று நடைபெற்ற 'ரட்ட ஹதன ஜன பலய' (நாட்டை கட்டியெழுப்பும் மக்கள் சக்தி) மாவட்ட மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
ஆட்சியைப் பொறுப்பேற்ற போது, கடந்த 30-40 ஆண்டுகளாக சீர்குலைந்து கிடந்த ஒரு அமைப்பையே எதிர்கொண்டோம். ஊழல்வாதிகளையும் மோசடிக்காரர்களையும் நீதிமன்றத்தின் முன் நிறுத்துவதற்குத் தேவையான வேலைத்திட்டத்தை உருவாக்குவதே எங்களின் முக்கிய வாக்குறுதியாக இருந்தது என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்த வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் போது சுமார் 11 லட்சம் வழக்குகள் தேங்கிக் கிடப்பது தெரியவந்துள்ளதாகவும், நீதிமன்ற அமைப்பை விரைவுபடுத்தவும் திறம்படச் செயல்படுத்தவும் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது குறித்தும் கவனம் செலுத்த வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஓய்வுபெறும் வயதை மட்டும் அதிகரிப்பது முழுமையான தீர்வாகாது என்பதை ஏற்றுக்கொண்டாலும், ஏனைய சீர்திருத்தங்களுடன் சேர்த்துப் பார்க்கும்போது நீதிபதிகளின் அறிவும் அனுபவமும் வழக்குகளை விரைவாக முடிவுக்குக் கொண்டுவர உதவும் என அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட ஒரு நபரை இலக்கு வைத்தே இந்த திருத்தம் கொண்டுவரப்படுவதாக எதிர்க்கட்சியினர் போலியான அச்சத்தை உருவாக்கி வருகின்றனர் என அமைச்சர் சாடியுள்ளார்.
நீதிமன்ற அமைப்பியல் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டால் அனைத்து நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதும் 2 ஆண்டுகளால் அதிகரிக்கப்படுமே தவிர, தனிப்பட்ட ஒருவருக்காக இது செய்யப்படவில்லை என அவர் விளக்கமளித்துள்ளார்.
பிரதம நீதியரசர் சூரசேனவின் பதவிக் காலத்திற்குப் பின்னர் இத்திருத்தத்தை மேற்கொள்ளுமாறு எதிர்க்கட்சியினர் கூறுவதன் மூலம், உண்மையில் ஒரு தனிநபரை இலக்கு வைப்பது அரசாங்கமா அல்லது எதிர்க்கட்சியா என்ற கேள்வி எழுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இப்போது கொண்டுவந்தால் தவறாகத் தெரிவது, டிசம்பர் மாதத்திற்குப் பின்னர் எவ்வாறு சரியாகும்?" என அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த ஆண்டின் இறுதிக்குள் மக்கள் இதற்கான நல்ல முடிவுகளைக் காண்பார்கள் எனவும், நீதியை நிலைநாட்டுவதில் அரசாங்கம் எடுத்த முடிவிலிருந்து ஒருபோதும் பின்வாங்காது என உறுதியளிப்பதாகவும் நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.