மட்டக்களப்பு மாவட்டத்தில் மேலும் புதிதாக 216 பட்டதாரிகள் நியமனம்!அரசாங்க அதிபர்
மட்டக்களப்பு மாவட்டத்தில் மேலும் 216 பட்டதாரிகள் எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதி முதல் பட்டதாரி பயிலுனர்களாக புதிதாக சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாகவும், அவர்களுக்கான நியமனக் கடிதங்கள் நாளை திங்கட்கிழமை (25) முதல் பிரதேச செயலகங்களில் வழங்கப்படும் என மாவட்ட செயலாளரும், அரசாங்க அதிபருமாகிய கணவதிப்பிள்ளை கருணாகரன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு 4 தொகுதி பட்டதாரி பயிலுனர்களுக்கு மாவட்டத்தில் 1958 பேருக்கு நியமனம் வழங்கப்பட்டது. இருந்தபோதும் வெளிநாட்டு பட்டம் பெற்றவர்கள் மற்றும் ஈ.ரி.எப். , ஈ.பி.எப் செலுத்திய சுமார் 389 பட்டதாரிகள் நியமனம் வழங்கப்படாமல் இருந்துள்ளனர்.
இந்த நிலையில், தற்போது இவர்களில் 216 பட்டதாரிகள் புதிதாக பட்டதாரி பயிலுனர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான நியமனக் கடிதங்களை திங்கட்கிழமை (25) முதல் பெப்ரவரி முதலாம் திகதி வரை பிரதேச செயலகங்களில் பெற்றுக்கொள்ள முடியும் என்பதுடன்,பெப்ரவரி முதலாம் திகதி தமது கடமைகளை பெறுப்பேற்குமாறும் அவர் தெரிவித்துள்ளார்.