கொழும்பின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
அடைமழை காரணமாக கொழும்பின் பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கி போக்குவரத்து மற்றும் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு இடையூறு ஏற்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் 21 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொழும்பு நகர சபையின் பணிப்பாளர் பொறியியலாளர் பிரியங்கர ரணவக்க தெரிவித்துள்ளார்.
குறுகிய கால வேலைத்திட்டத்தின் கீழ் நீர் தேங்கும் இடங்களில் வீதிகள், வடிகால்கள், பள்ளங்கள் என்பன சுத்தப்படுத்தப்பட்டு வருவதாகவும், கடும் மழைக்கு மத்தியிலும் மாநகர சபை நெருக்கடிக்கு தீர்வை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெள்ள அபாயம்
திவுல்கஸ் சந்தி, கிரீன் பாத், நொரிஸ் கெனல் வீதி, டீன்ஸ் வீதி, மருதானை தேவானம்பியதிஸ்ஸ மாவத்தை போன்ற பகுதிகள் அடிக்கடி வெள்ளத்தில் மூழ்கி மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு இடையூறு ஏற்படுவதாகவும், அவற்றை அகற்றுவதற்கான சட்ட நடவடிக்கைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கொழும்பு 9, போதிராஜா மாவத்தை உள்ளிட்ட நீர் மட்டத்திற்கு கீழே மக்கள் வாழும் சில தோட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும், சதுப்பு நிலப்பகுதிகளில் இருந்து அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி அப்புறப்படுத்த வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உலக வங்கியின் உதவியுடன் செயல்படுத்தப்பட்ட வடிகால் திட்டம் நிறைவடைந்துள்ளது.
இது போன்ற மற்றொரு நீண்ட கால திட்டத்திற்கான நிதியை பெறுவதற்கான அடிப்படை திட்டங்கள் இந்த நாட்களில் தயாரிக்கப்படும் என்று அவர் மேலும் கூறினார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |